பொதுநல இலாகாவால் வேண்டுமென்றே இழிவுபடுத்தப்பட்டதால் உடல் ஊனமுற்றவர் படியில் தவழ்ந்தே ஏறிச் சென்றார்

JKM-kedah 2உடல் ஊனமுற்ற ஒருவர் தமது மகஜர் ஒன்றை கெடா பொதுநல இலாகாவிடம் (ஜேகேஎம்) தாக்கல் செய்வதற்காக பல படிகளை தவழ்ந்தே ஏறிச் சென்றார். அவருக்காக அவரது மன்றம் எடுத்துக் கொண்ட முயற்சியை அவ்விலாகா இயக்குனர் வேண்டுமென்றே இழிவுபடுத்தியதால், அவர் இந்நடவடிக்கையை மேற்கொண்டார்.

பெர்சத்துவான் ஒகேயு செத்தியா டெயரா கூலிம் என்ற அமைப்பைச் சேர்ந்த சுமார் 50 உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பொதுநல நன்மைகள் பற்றி ஜேகேஎம் முன்பு இன்று பிற்பகல் மணி 1.30 க்கு கூடி கண்டனக் குரல் எழுப்பினர் என்று தொடர்பு கொண்டபோது படாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கூறினார்.

ஆனால், கூலிம் ஜேகேஎம் இயக்குனர் ரொஹானா யுசுப் அந்த மகஜரை ஏற்க மறுத்து விட்டு அக்கட்டத்தின் முதல் மாடியில் அவரது இலாகாவின் அலுவலகத்திற்குள் இருந்து கொண்டார்.

கடும் வெயிலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பின்னர், அந்த மன்றத்தின் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஞானப்பிரகாசன், வயது 53, அந்த மகஜரை அவரே முதல் மாடிக்குச் சென்று ரொஹானாவிடம் கொடுக்க தீர்மானித்தார். அவர் உடல் ஊனமுற்றவராதலால், அவரால் நடக்க முடியாது.

JKM-kedah 1“அந்த மகஜரை தனது வாயில் கவ்விக் கொண்டு, தனது கைகளைப் பயன்படுத்தி அந்தப் படிகளில் தவழ்ந்து ஏறிச் சென்று ரொஹானா அவரது அறையிலிருந்து வெளியில் வந்து மகஜரைப் பெற்றுக் கொள்ளும் வரையில் அவரது அறையின் கதவை தட்டித் தீர்த்தார்”, என்று சுரேந்திரன் கூறினார்.

இச்சம்பவம் இந்நாட்டின் ஊனமுற்றவர்கள் மற்றும் முதியவர்கள் மீது பொதுநல இலாகா காட்டும் பரிவின்மையை வெளிப்படுத்தியது என்று அவர் மேலும் கூறினார்.

“இது ஊனமுற்றோரின் திடீர் தாக்குதல். இது ஒரு தேசிய அவமானம். இதற்கு (மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு) அமைச்சர் பதில் கூற வேண்டும்”, என்றுJKM-kedah 3 அவர் கூறினார்.

மகஜரில் கூறப்பட்டிருந்த குறைபாடுகளில் ஒன்று கூலிம் ஜேகேஎம் அலுவலகம் முதல் மாடியில் அமைந்திருப்பதாகும். உடல் ஊனமுற்றவர்கள் அங்கு சென்றடைவது கடினமானதாகும்.

ஜேகேஎம் உடல் ஊனமுற்றவர்கள் வசிக்கும் இடத்திற்கு செல்ல மறுத்தது இன்னொரு விவகாரமாகும். இன்னும் பலர் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பொதுநல அலவன்ஸ்கள் கிடைப்பதில்லை என்ற புகாராகும்.

இச்சம்பவம் நடந்த வேளையில், லுனாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் நசாருடினும், பிகேஆர் சட்டப் பிரிவு தலைவர் லத்தீபா கோயாவும் அங்கிருந்தனர்.

 

TAGS: