சிறையில் இருந்து வெளியேற அண்ணா ஹசாரே மறுப்பு

நேற்று கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவை திகார் சிறையில் இருந்து விடுவிக்கும்படி நேற்று இரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் சிறை அதிகாரிகள் இறங்கினர். ஆனால், சிறையில் இருந்து வெளியேற ஹசாரே மறுத்துவிட்டார்.

“எந்த நிபந்தனைகளுமின்றி ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் உண்ணாநோன்பு இருக்க அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் சிறையை விட்டு நான் வெளியேறமாட்டேன்” என கூறினார்.

சிறை அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் ஹசாரே சிறையில் இருந்து வெளியேற பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

பல நேர பேச்சு வார்த்தையின் பின்னர் அண்ணா ஹசாரே சிறையை விட்டு வெளியேறினார். அவருடன் கைதுசெய்யப்பட்ட அனைவரும் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டனர்.

டெல்லியில் தடையை மீறி உண்ணாநோன்பு இருக்க முயன்ற சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட முன்பே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று எதிர்க்கட்சிகள், பல்வேறு சமூக அமைப்புகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இதனால் வீண் பிரச்னைகளைத் தவிர்க்க, ஹசாரே உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்ய டெல்லி அரசு நேற்றிரவு முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து, அவர்கள் மீதான வழக்குகளை டெல்லி காவல்துறை மீட்டுக்கொண்டது.