இசி: பிஎஸ்சி-இல் பெர்சே 2.0 இடம்பெறக்கூடாது

தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழுவில் பெர்சே 2.0க்கு இடமளிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணைய(இசி) துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அக்குழுவில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்பிகள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் என்றவர் கூறியதாக மலாய்மொழி நாளேடான பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதில் பெர்சே 2.0-ஐயும் சேர்த்துக்கொள்ள பிகேஆர் செய்துள்ள பரிந்துரையைப் புறந்தள்ள வேண்டும் என்றாராவர்.

இது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம்.

“அக்குழுவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இடம்பெறுவதுதான் நல்லது”, என்றவர் அந்நாளேட்டிடம் தெரிவித்தார்.

இதற்குமுன் வான் அஹ்மட், மாற்றரசுக்கட்சிக்கு மக்கள் ஆதரவைப் பெற்றுத்தரும் நோக்கில்தான் ஜூலை 9 பேரணி நடத்தப்பட்டதாக பெர்சே 2.0 மீது குற்றம் சாட்டியுள்ளார்.

உத்துசான் மலேசியாவுக்கு எழுதிய கடிதத்தில் அவர், மலேசியாவில் தேர்தல்கள் எப்போதுமே சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட்டு வந்திருப்பதாகவும் மாற்றரசுக் கட்சி அடுத்த தேர்தலில் வெற்றிபெற இசி-யைப் பலிகடா ஆக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘இசி ஒத்துழைக்கும்’

இதனிடையே இசி தலைவர் அப்துல் அசிஸ் யூசுப், நாடாளுமன்றக் குழுவுடன் ஒத்துழைப்பதாக உறுதி கூறியுள்ளார்.

“நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டதும் இசி அதனுடன் ஒத்துழைக்கும்”, என்று நேற்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

தேர்தல் நடைமுறைகளைப் புதுப்பித்து மக்களாட்சி முறையை வலுப்படுத்தவும் சட்ட ஆளுமையை நிலைநிறுத்தவும் அக்குழு அமைக்கப்படுவது மிகப் பொருத்தமான ஒன்று என்றவர் கருத்துத் தெரிவித்தார்.

அக்குழு பற்றிக் கருத்துத் தெரிவித்த டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், அதன் தொடர்பில் தமக்குள்ள கவலையையும் வெளிப்படுத்தினார். தகவல்கள் பெற முனையும்போது இசியும் மற்ற அரசுத்துறைகளும் “அதிகாரப்பூரவ இரகசியங்கள்” “தேசியப் பாதுகாப்பு”என்று கூறி அல்லது வேறு காரணங்களைச் சொல்லி குழுவின் பணிக்கு முட்டுக்கட்டை போடுவார்கள் என்றாரவர்.

முன்பு அவ்வாறு நிகழ்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அப்துல்லா அஹமட் படாவி பிரதமராக இருந்தபோது உயர்நெறிகள்மீது நாடாளுமன்றத் தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது என்றும் அதனுடன் அரசுத் துறைகள் ஒத்துழைக்கவில்லை என்றும் அதன் விளைவாக அதன் தலைவர் பெர்னார்ட் டொம்போக்கும் மற்ற உறுப்பினர்களும் குழுவிலிருந்து விலக 2008-இல் நாடாளுமன்றம் கலைக்கப்படும்வரை அது எந்த அறிக்கையையும் தயாரிக்கவில்லை என்றாரவர்.