போலீஸ்: கைதி வலிப்புநோய் கண்டு இறந்தார்; அடியினால் அல்ல

aginசெபராங் பிறை  தெங்கா  போலீஸ் (எஸ்பிடி),  சனிக்கிழமை  புக்கிட்  மெர்தாஜாம்  மருத்துவமனையில்  இறந்த  எஸ். நாயுடு  ஆகின் ராஜ் (வலம்)  போலீசார்  அடித்ததால்  செத்தார்  என்று  கூறப்படுவதை    மறுத்தது.

அந்த  26-வயது  லாரி  ஓட்டுனர், கடந்த  ஆறு  மாதங்களில்  பினாங்கு  போலீஸ்  லாக்-அப்களில்  இறந்துபோன  ஏழாவது  நபராவார்.

“அவரை  அடிக்கவில்லை.  அவரை  அடிப்பதற்குக்  காரணம்  ஏதுமில்லை”,  என  எஸ்பிடி  போலீஸ்  தலைவர் எஸ்யுபிபி பஹாரோம்  அபு  கூறினார்.

“திருடுபோன  பொருள்  கிடைக்கவில்லை  என்றால்தான் (அவற்றைக் கண்டுபிடிக்க) பலவந்தப்படுத்துவோம்.  ஆனால், இவ்விவகாரத்தில் (அவரைப் பிடித்தபோதே)  பொருள்களும்  கிடைத்துவிட்டன”,  என்றாரவர்.

நேற்று  டாக்டர்  பூபேந்தர்  சிங்  மேற்கொண்ட  சவப் பரிசோதனையில்,  ஆகின்  ராஜ்  வலிப்புநோயால்  மூச்சுத்திணறல்  ஏற்பட்டு  மூளைக்குப்  போதுமான  உயிர்க்காற்று  கிடைக்காததால்  இறந்தார் என்பது  தெரிய  வந்திருப்பதாகக்  கூறினார்.