முன்னாள் ஐஜிபி கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுத்தார்

முன்னாள் ஐஜிபி மூசா ஹசான், அன்வார் இப்ராஹிமின் வழக்குரைஞர்கள் வழக்கின் முக்கிய விஷயங்களை தொட்ட பின்னர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

அந்த வழக்குரைஞர்களும் அன்வாரும் அவரைச் சந்தித்த போது தொடக்கத்தில் மூசா மிகவும் ஒத்துழைத்ததாக வழக்குரைஞர் சங்கர நாயர் சொன்னார்.

தொடக்கத்தில் மூசா சில கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

“ஆனால் நாங்கள் வழக்கின் முக்கிய விஷயங்களைத் தொட்ட போது தாம் பிரதிவாதிச் சாட்சியாக இருக்க விரும்பவில்லை என்றும் பேட்டி கொடுக்க விரும்பவில்லை என்றும் மூசா சொன்னார்,” என்றார் சங்கரா.

இடைமறித்த அன்வார்,” தயாரிக்கப்பட்ட வசனம்,” என்றார்.

பிற்பகல் மணி 2.30க்கு வந்து சேர்ந்த மூசாவுடனான சந்திப்பு ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்தது என்றும் சங்கரா  தெரிவித்தார்.

பேட்டியின் போது சங்கராவுடன் ராம் கர்பாலும் பரம் குமாரஸ்வாமியும் இருந்தனர்.

பிரதிவாதித் தரப்பு வருத்தமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட சங்கரா, பதில் அளிக்க மறுக்கும் உரிமை சாட்சிக்கு உண்டு என நீதிபதி கூறிய போதிலும் மூசா உதவி செய்திருக்கலாம் என்றார்.

“புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் அவரது பெயரை நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார். ஆகவே அவர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.”

“அவர் சொல்லக் கூடிய விஷயங்கள் எங்கள் பிரதிவாதித் தரப்புக்கு உதவி செய்திருக்கக் கூடும். ஆனால் மூசா அவ்வாறு செய்வதில்லை என முடிவு செய்தார்,” என்றும் சங்கரா குறிப்பிட்டார்.

அப்போதைய துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் புகார் செய்த பின்னர் உரையாடல் ஒன்றை செவிமடுத்தவுடன் ஐஜிபியின் கைத் தொலைபேசி எண்ணை குறித்துக் கொண்டதாக சைபுல் சாட்சியமளித்த போது கூறியிருந்தார்.

அன்வாருக்கு எதிரான முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில் ஆதாரங்களை ஜோடித்ததாக கூறப்படுவது மீது அந்த முன்னாள் ஐஜிபி விசாரிக்கப்பட்ட போதிலும் மூசாவுடனான பேட்டி மிகவும் அமைதியாக இருந்ததாகவும் சங்கரா வருணித்தார்.

இன்று பேட்டி காணப்பட்ட இன்னொரு சாட்சி, அன்வாருடைய முன்னாள் உதவியாளரான கோஹாருல்லா அப்துல் மஜிட் ஆவார்.