இலங்கையில் பெரிய துறைமுகம் சீனா அமைக்கிறது

இலங்கையில் 500 மில்லியன் டோலர் செலவில் பெரிய துறைமுகத்தை சீனா அமைக்கவுள்ளது. கடந்த வாரம் சீனாவுக்கு இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே சென்றுவந்தார். அப்போது இத்துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இலங்கை – சீனா இடையே கையெழுத்தானது.

இலங்கையில் புதிதாக அமைக்கப்படும் இத்துறைமுகத்தின் 55 சதவீத பங்குகள் சீனாவின் ‘சீனா மெர்ச்சண்ட் ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனமும் 30 சதவீத பங்குகள் இலங்கையின் ‘அய்ட்கென் ஸ்பென்ஸ் ஹோல்டிங்’ நிறுவனமும் 15 சதவீத பங்குகள் இலங்கை துறைமுக ஆணையத்திடமும் இருக்கும்.

இந்த துறைமுகம் அடுத்த 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. துறைமுகத்தில் முதல் கட்டப்பணிகள் 2013-ல் நிறைவடையும். ஏற்கெனவே சீனா தனது முதலீட்டில் இலங்கையின் தென்பகுதியான அம்பாந்தோட்டத்தில் மிகப்பெரிய அளவிலான துறைமுகத்தை கட்டி வருகிறது. சீனாவைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனங்களான ‘சீனா ஹார்பர்’, ‘சினோ ஹைட்ரோ’ ஆகியவை இந்த கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய வசதியாக தனது வெளியுறவுக் கொள்கையை இலங்கை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான அறிவிப்பினை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.