ராஜபக்சே மீதான வழக்கை விசாரிக்க முடியாது : ஆஸ்திரேலியா அரசு

இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே மீதான போர்க் குற்ற வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என ஆஸ்திரேலிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவரும் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான அருணாசலம் ஜெகதீஸ்வரன் (வயது 63) என்ற பொறியாளர், இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே மீது போர்க் குற்ற வழக்கு ஒன்றை கடந்த 24-ம் தேதி மெல்போர்ன் நகர நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.

பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், போர் விலக்குப் பகுதிகள், மருந்துக் கிடங்குகள் ஆகியவற்றின் மீது கொத்துக் குண்டுகளை வீசி இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றது குறித்து, ராஜபக்சேவை ஆஸ்திரேலிய அரசு விசாரிக்க வேண்டும் என அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.

இன்று முதல் 30-ம் தேதி வரை, ஆஸ்திரேலிய தலைநகர் பெர்த்தில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்பதற்காக மகிந்த ராஜபக்ஷே 24-ம் தேதி ஆஸ்திரேலியா சென்றபோது, இவ்வழக்கு தொடுக்கப்பட்டதால் உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது.

ஆனால், இதுபோன்ற வழக்கை தொடர அனுமதிப்பதன் மூலம், அனைத்துலக சட்டத்தை மீறுவதாகக் அரச தரப்பு வழக்கறிஞர் க்லீ லேண்டு கருதுகிறார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அனைத்துலக சட்டப்படி, நாடுகளின் தலைவர்கள், தூதர்கள் போன்றோர், சட்டப் பாதுகாப்பு வளையத்துக்குள் வருகின்றனர். அதன்படி, இலங்கை குடியரசுத் தலைவர் சட்டப் பாதுகாப்பு வளையத்துக்குள் வருகிறார். சட்டப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பவர் யாராக இருந்தாலும், அவரை எந்த நாடும் கைது செய்யவோ பிடித்து வைக்கவோ முடியாது என அரச தரப்பு வழக்கறிஞர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவு குறித்து தமிழர்கள் பெரும் ஏமாற்றமும் வருத்தமும் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் மெல்கம் ப்ரேசர் தெரிவித்துள்ளார்.