மாமாக் உணவகங்கள்: எங்கள் விலைகள் குறைவு

நாட்டின் மற்ற உணவகங்களைவிட தங்கள் உணவகங்களில் உணவு மற்றும் பானங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம்(பிரிஸ்மா) கூறுகிறது.

வேண்டுமானால் அதிகாரிகள் மாமாக் உணவகங்களின் தரத்தில் உள்ள எல்லா உணவகங்களிலும் உணவு விலைகளை ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று அதன் தலைவர் நூருல் ஹசான் சாவுல் அமீட் வலியுறுத்தினார்.

“அடக்க விலையையும் மற்ற அம்சங்களையும் பார்க்க வேண்டும்….எடுத்துக்காட்டுக்கு பங்சாரில் ரொட்டி சானாய் விலை ரிம1.20 தான்.பங்சார் உயர்விலைகளுக்குப் பேர்போன இடம் என்பதால் இந்த விலை மிகவும் குறைவான ஒன்றுதான்.” நேற்றிரவு லெம்பா பந்தாயில் கொண்டோ ரக்யாட் பந்தாய் தேசாவில் ஹரி ராயா அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் நூருல் ஹசான் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஸ்டால் கடைகளுடன் ஒப்பிடக்கூடாது. இரண்டின் செலவுகளும் வெவ்வேறானவை என்றவர் கூறினார்.

“தேர்வு பயனீட்டாளர்களுடையது. ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் விலைகள் கூடுதலாக இருக்கிறதா…  அங்கு செல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்”, என்றாரவர்.

ஒரு மாமாக் உணவகத்தில், வழக்கமாக ரிம2-க்கு மேற்போகாத லைச்சி பானத்துக்கு ரிம5 வாங்கிவிட்டார்கள் என்று புகார் கூறப்பட்டிருப்பது பற்றி அவரிடம் வினவப்பட்டபோது இவ்வாறு கூறினார்.

அந்நிகழ்வில், தனித்துவாழும் தாய்மார்கள், முதியோர், வாய்ப்புக்குறைந்தவர்கள், ஆதரவற்றோர் எனச் சுமார் 500 பேர் ஆளுக்கு ரிம100 அன்பளிப்பைக் கூட்டரசு பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் ராஜா சைனலிடமிருந்து பெற்றனர்.

-பெர்னாமா