பினாங்கில் த ஸ்டார் பிரதிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன

இன்று பினாங்கில் த ஸ்டார் நாளேட்டின் அலுவலகத்துக்குமுன் கூடிய ஒரு சிறு கூட்டம் அச்செய்தித்தாள் பிரதிகளைக் குவித்து வைத்து எரியூட்டியது.

தங்களைப் பல்வேறு மலாய் என்ஜிஓ-களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட 11 பேர், முதலில் அந்நாளேட்டை “பேப்பர் ஹராம்”, “பெரித்தா பல்சு”என்று சத்தமிட்டுக்கொண்டே அதன் பிரதிகளைக் காலில் போட்டு மிதித்தார்கள்.

பெர்காசா பினாங்கு கிளை, சுவாரா அனாக் அனாக் மலேசியா(எஸ்ஏஏஎம்), பெர்சத்துவான் கெமாஜுவான் இன்சான் மலேசியா முதலிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதில் இடம்பெற்றிருந்தனர்.

பின்னர் அவர்கள், த ஸ்டாருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சுலோகங்கள் அடங்கிய அட்டைகளைக் கையில் ஏந்தி அந்நாளேட்டின் ஆசிரியருக்கு எதிராக உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரக்கக் கூவினர்.

அந்த நாளேடு நோன்பு துறக்கும் கட்டுரைகளுடன் ஹலால்-அற்ற உணவகங்கள் பற்றிய செய்திகளையும் சேர்த்து வெளியிட்டதற்கு உண்மையான மன்னிப்பைத் தெரிவிக்காவிட்டால் “இன்னும் பெரிய நடவடிக்கைகள்” மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

“அது முறையாக மன்னிப்பு கேட்காவிட்டால் மூன்று
ட்ரேய்லர்(இழுவை வண்டிகள்) நிறைய அந்நாளேடுகளைக் கொண்டுவந்து எரிப்போம்”, என்று எஸ்ஏஏம் தலைவர் அப்துல் கனி முகம்மட் சீமான் உரத்த குரலில் கூறினார்.

சிறுபான்மையினரைப் பிரதிநிதிக்கும் அந்நாளேடு பெரும்பான்மையோரின் மனத்தைப் புண்படுத்திவிட்டதாக வடகிழக்கு பினாங்கு பெர்காசா தலைவர் முகம்மட் ரிட்சுவான் முகம்மட் அசுட்டின் கூறினார்.

அந்நாளேட்டுக்கும் அதன் செய்தி ஆசிரியருக்கும் எதிராக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

“அவர்கள் சரியானபடிக்கு மன்னிப்பு கேட்கவில்லை.நடந்த தவற்றுக்குச் செய்தி ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும்.”

இன்னொரு பெர்காசா பிரதிநிதியான நூர்ஹாலிம் அப்துல், அச்செய்தித்தாளின் வெளியீட்டு உரிமத்தை ரத்துச் செய்ய வேண்டுமென்றார்.

“செய்தி ஆசிரியரையும் வேலைநீக்கம் செய்ய வேண்டும்”, என்றவர் குறிப்பிட்டார்.

“ஸ்டாருக்கு மட்டுமல்ல, மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காத எல்லாச் செய்தித்தாள்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்”.

அக்குழுவினர் தாங்கள் வைத்திருந்த அறிவிப்பு அட்டைகளை த ஸ்டாரின் பிரதிநிதியான பிலோமினா அந்தோனியிடம் ஒப்படைத்து அவற்றில் உள்ள சுலோகங்களைப் படிக்குமாறு  அவரின் “எஜமானரிடம்” கூறுமாறு தெரிவித்துக்கொண்டனர்.

அந்நாளேடு கடந்த வாரம் “ரமலான் உணவுகள்” என்று வெளியிட்டிருந்த உணவுப் பட்டியலில் எப்படியோ பன்றி இறைச்சி கலந்த உணவுகள் மற்றும் அவை விற்கப்படும் ஹலால்-அற்ற உணவகங்கள் பற்றிய செய்திகளும் படங்களும் இடம்பெற்று விட்டன. இது முஸ்லிம்களுக்கு ஆத்திரமூட்டியது.

இத்தவற்றுக்காக அந்நாளேடு இரண்டு தடவை மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன் அதற்குப் பொறுப்பான செய்தி ஆசிரியரையும் இடைநீக்கம் செய்துள்ளது.

பாயான் லிப்பாஸ் பன்னாட்டு விமான நிலையத்துக்கு 1கிலோ மீட்டர் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்தபோது சுமார் 50 போலீசார் அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

அங்கிருந்த தென்மேற்கு வட்டாரப் போலீஸ் தலைவர் லாய் பா ஹின், அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட 10 நிமிடமும் பின்னர் கலைந்துசெல்ல ஐந்து நிமிடமும் அவகாசம் அளித்ததாகக் கூறினார்.

பொதுமக்களுக்கோ பொதுச்சொத்துகளுக்கோ சேதம் ஏற்படுத்தக்கூடாது என்று எச்சரித்ததாகவும் அதன்படியே அவர்கள் நடந்துகொண்டார்கள் என்றும் அவர் சொன்னார்.

“திறந்த வெளியில் அவர்கள் நாளேட்டுப் பிரதிகளை எரித்தது பற்றிச் சுற்றுச்சூழல் துறையிடம் புகார் செய்துள்ளேன். அவர்கள் தேவையான நடவடிக்கை எடுத்துக்கொள்வார்கள்”, என்றவர் மேலும் கூறினார்.