தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணை

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் தமிழக அரசு இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

சமச்சீர் கல்வித் திட்டம் அவசரக் கோலத்தில் கொண்டுவரப்பட்டிருப்பதால், அதில் பல குளறுபடிகள் உள்ளதாகவும், பாடங்களில் தரமில்லை என்றும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத்தான் அந்தச் சட்டமே கொண்டுவரப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த அரசு சமச்சீர் கல்விக்கு எதிரானதல்ல என்றும், அதில் உள்ள தவறுகளைக் களைந்து அமல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில், சமச்சீர் கல்வித் திட்டத்தில், 9 கோடி பாடப் புத்தகங்கள் 200 கோடி இந்திய ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு, அரசுக் கிடங்குகளில் கிடப்பதாகவும், முந்தைய அரசால் கொண்டுவரப்பட்டது என்ற அரசியல் காரணத்துக்காகவே அரசு அந்தத் திட்டத்தை எதிர்ப்பதாகவும் மாணவர் மற்றும் பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாட்டில், மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிகுலேஷன் உட்பட நான்கு வகையான கல்வித் திட்டங்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஒரே பாடத்திட்டமாக்கி, அதன் தரத்தை உயர்த்தி, சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டதாக, முந்தைய அரசு அறிவித்திருந்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, இந்தக் கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.