“நீதிபதிகள் என்ன அடிமைகளா?”: முன்னாள் தலைமை நீதிபதி விசனம்

இலங்கை அரசாங்கம் நீதித்துறையை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

தன் மீதான விசாரணைக்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி அரசியல் ரீதியான பழிவாங்கல் எனவும் சரத் என்.சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஞாயிற்றுக் கிழமை கூறியுள்ளார்.

ஓய்வுபெற்ற தலைமை நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிரான விசாரரணைகளை நடத்துவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் இன்னும் பல ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 75 பேர் தீர்மானமொன்றின் ஊடாக சபாநாயகர் சமல் ராஜபக்சேவை கோரியிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஊடகங்களுக்குப் பதிலளித்துள்ள சரத் என். சில்வா; கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்து, நிறைவேற்று அதிகார குடியரசுத் தலைவர் முறைக்கு எதிராக குரல் கொடுத்ததாலேயே தன்னை மகிந்தா அரசு பழிவாங்கப் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் மகிந்தா ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட, தற்போது சிறையிலுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக சரத் என். சில்வா பிரச்சாரங்களை செய்திருந்தார்.

அதன் பின்னர், மகிந்த ஆட்சிக்கு எதிராக பகிரங்கமான விமர்சனங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த அவர், எதிரணியிலுள்ள ஜேவிபி சார்பு நிகழ்வுகளிலும் அதிதியாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGS: