காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்; 5 பேர் பலி

இஸ்ரேலின் தெற்கே ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் இஸ்ரேலும் காசா நிலப்பரப்புக்குள் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் குறைந்தது 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக இஸ்ரேலிய மண்ணில் எகிப்தின் எல்லையை ஒட்டி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து ‘பதிலடி’ கொடுக்கப்படும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எகுட் பாரக் கூறியிருந்தார்.

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸுடன் இணையாது காசாவில் செயற்பட்டுவரும் பீஆர்சி என்ற அமைப்பின் தலைவரும் மேலும் நான்கு உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஃபா நகரில் வீடொன்றிலிருந்த இரண்டு பொதுமக்கள் கொல்லபட்டுள்ளதாக பாலஸ்தீன் தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, பீர்ஷெபா நகரிலிருந்து கரையோர நகரான ஈலட் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்றின் மீது ஆயுததாரிகள் முதலில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, வீதியோரத்து குண்டொன்றுக்கும் ரொக்கட் தாக்குதலுக்கும் மேலும் இரண்டு வாகனங்களும் சிக்கின. சம்பவ இடத்துக்கு விரைந்த இஸ்ரேலிய படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கிச் சண்டையும் இடம்பெற்றிருந்தது.