அண்ணா ஹசாரே உண்ணாநோன்புக்கு காவல்துறை அனுமதி

ஊழலை ஒழிக்கும் முயற்சி வெற்றியடைய வலுவான லோக்பால் சட்டத்தைக் கொண்டுவரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக சேவகர் அண்ணா ஹசாரே நாளை (19.8.2011) முதல் டெல்லி ராம்லீலா திடலில் தனது உண்ணாநோன்பு போராட்டத்தைத் துவக்க இருக்கிறார்.

கடந்த 16-ம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் அண்ணா ஹசாரேவுக்கும் டெல்லி காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட சமரசத்தை அடுத்து 15 நாட்கள் உண்ணாநோன்பு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் மற்றும் தர்ணாப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள ராம்லீலா திடல், மாநகராட்சி ஊழியர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நாளை காலை முதல் அண்ணா ஹஸாரே அங்கு தனது போராட்டத்தைத் தொடங்குவார் என்று அவரது ஆதரவாளர்களான அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண்பேடி ஆகியோர் தெரிவித்தனர்.

ராம்லீலா திடலுக்குச் செல்லும் வரை அண்ணா ஹஸாரே தொடர்ந்து திகார் சிறையிலேயே இருப்பார் என்று கிரண்பேடி தெரிவித்தார்.