கர்பால்: சைபுல்-ஃபாரா உறவு பற்றி ஏஜி விசாரிப்பது முறையல்ல

முகம்மட் சைபுல் புகாரி அஸ்லானுக்கும் டிபிபி ஃபாரா அஸாலினா லத்திப்புக்குமிடையில் கள்ளத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை விசாரிப்பதில் சட்டத்துறை அலுவலகம் (ஏஜி) சுயேச்சையாக செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஃபாரா, ஏஜி அலுவலகத்தைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணையைச் சுயேச்சையான அமைப்பு ஒன்றுதான் நடத்த வேண்டும் என மூத்த வழக்குரைஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கர்பால் சிங் கூறினார்.

ஃபாரா, அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கில் அரசுத்தரப்பு வழக்குரைஞர்களில் ஒருவர். சைபுல் அவ்வழக்கில் வாதி.

எனவே, ஏஜி அலுவலகத்துடன் தொடர்பில்லாத ஓர் அமைப்பிடம் விசாரணையை ஒப்படைப்பதுதான் முறையாகும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கர்பால் கூறியிருந்தார்.

அவ்விவகாரம் உண்மைதான் என்பதற்கு “வலுவான” ஆதாரம் எதுவும் இல்லை என  ஏஜி அலுவலகம் கூறியதாக நடப்பில் சட்ட அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசீஸ் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்வினையாற்றியபோது கர்பால் இவ்வாறு கூறினார்.

“முன் எப்போதும் நடந்திராத ஒன்றாக ஒரு டிபிபி-க்கும் குற்றவியல் வழக்கு ஒன்றின் புகார்தாரரான ஒருவருக்குமிடையில் கள்ளத் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறதென்றால் அதைப் பகிரங்கமாக விசாரிக்க வேண்டும்”, என்றாரவர்.

அவர்களுக்க்கிடையில் கள்ள உறவு இருந்திருந்தால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். ஷியாரியா நீதிமன்றத்தில் அவர்கள் குற்றம் சாட்டப்படும் சாத்தியமும் உண்டு என்று கர்பால் கூறினார்.

ஃபாரா அரசுத்தரப்பு வழக்குரைஞர் குழுவிலிருந்து அகற்றப்பட்டிருப்பது அவர் குற்றமற்றவர்தானா என்று வினவத் தூண்டுகிறது என்று கர்பால் குறிப்பிட்டார்.

“அவர் குற்றமற்றவர் என்றால் எதற்காக அவரை அகற்ற வேண்டும்?”, என்றாரவர் .

சைபுலுக்கும் ஃபாராவுக்குமிடையில் மிகையான காதல் தொடர்பிருப்பதாக இணையத்தளத்தில் குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கியதை அடுத்து கடந்த ஆண்டு ஜூலை 27-இல் அரசுவழக்குரைஞர் குழுவிலிருந்து ஃபாரா நீக்கப்பட்டார்.