இஸ்லாம் அல்லாதவர்கள் சூராவ்வில் தங்க அனுமதித்தேன் – பிலால் ஒப்புக்கொண்டார்

ஜோர்ஜ்டவுன், தாமான் ஃப்ரி ஸ்கூல் சூராவ்வில், சீன ஆடவர்களும் பெண்களும் தங்க தான் அனுமதித்ததை, அதன் பிலால் ஒப்புக்கொண்டார்.

சீனர்கள் சிலர் அந்தச் சூராவ்வில் தங்கியிருந்த படங்கள், தகவல் ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சப்னோ துகிஜோ எனும் அந்த 50 வயது பிலால், பெரித்தா ஹரியான் இணையப் பத்திரிக்கையிடம் அதனை ஒப்புக்கொண்டார்.

நடந்த சம்பவத்தை கூறுகையில், “அன்று அதிகாலை சுமார் 2 மணியளவில், குடியிருப்பாளர்கள் தங்களைக் காப்பாற்றிகொள்ள அருகிலுள்ள கோயிலுக்குச் செல்ல முயற்சித்தனர். ஆனால், வெள்ள நீரோட்டம் பலமாக இருந்ததால், அவர்களால் அங்குச் செல்ல முடியவில்லை. உண்மையில், முதலில் அவர்கள் சூராவ்வில் தங்க தயங்கினர், ஆனால், அச்சமயம் வெள்ளம் நீர் நெஞ்சளவுக்கு உயர்ந்துவிட்டதால், வேறு வழியின்றி அவர்கள் அங்கு தஞ்சம் புகுந்தனர்,” என்றார் சப்னோ துகிஜோ.

“அவர்கள் செல்லவிருந்த கோயில் சில மீட்டர் தூரத்தில்தான் இருந்தது, நான் மின்கம்பத்தில் கயிறு கட்டி, அவர்களை அங்குக் கொண்டுசெல்ல முயன்றேன், ஆனால் நீரோட்டம் பலமாக இருந்ததால் எங்களால் முடியாமல் போனது,” என்று மேலும் அவர் தெளிவுபடுத்தினார்.

“இறுதியில் அவர்களை நான் அங்குத் தங்க அழைத்தேன், அவர்களும் பாதுகாப்பு கருதி அங்கு தங்கினர்,” என்றார் அவர்.

ஜோர்ஜ்டவுன், பி ரம்பி வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 70 சீனர்களும் இந்தியர்களும் அந்த சூராவ்வில் தங்கியிருந்ததாக சப்னோ கூறினார்.

சமூக ஊடகங்களில் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல, ஒருவரின் உயிருக்கு பாதுகாப்பு கொடுப்பதுதான் முக்கியம் என்றார் சப்னோ.

“சமூக ஊடகங்களில், பலர் என் செயலைக் கண்டித்துப்  பேசியிருக்கலாம், ஆனால், வெள்ள நீரோட்டத்தில் அடித்துசெல்லவிருந்த அவர்களைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், அதுதான் நான் செய்த பெரும் பாவமாக இருந்திருக்கும்,” என்று பிலால் சப்னோ துகிஜோ கூறினார்.