இருமொழி திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளிலிருந்து அகற்ற – தியாகுவின் 350 கிமீ நடைப்பயணம்!

இருமொழி திட்டத்தை தவறாக கையாண்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மீது கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களுக்கு இடையே, இந்தத் திட்டம் தமிழ்க்கல்வியின் கட்டமைப்பையே உடைத்துவிடும் வகையில் உள்ளது என்பதை உணரவைக்க ஒரு நீண்ட நடைப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார் தியாகு.

மருந்தியல் பட்டதாரியான தியாகு, வயது 27, சொகூர்பாருவிலிருந்து புத்ராசெயா வரையில் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் 17 நாட்களில் 350 கிலோமீட்டர் தூரத்தை கடக்க முற்படும் அதே வேளையில் ஆங்காங்கே நடைபெறும் கவன ஈர்ப்பு கூட்டங்களில் தனது குறிக்கோளை விளக்கவுள்ளார்.

தனது இந்த நீண்ட நடை ப்பயணத்திற்காக கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி எடுத்து வருவதாக கூறும் தியாகு, “சிலர் ஆதரவு தறுகின்றனர், சிலர் இது ஒரு தேவையற்ற நடவடிக்கை என்கின்றனர். எனக்கு இது ஒரு வேள்விப் பயணம். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று கத்தியபோதெல்லாம் இரவில் தூக்கம் வராது. அதன் தாக்கம்தான் இந்த முடிவுக்கு காரணம்”, என்று புன்னகையுடன் கூறினார் தியாகு.

இந்த ஆண்டு அரைகுறையாக சுமார் நாற்பது தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி எனப்படும் இருமொழி திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.  இவற்றுக்கெல்லாம் எடுத்த முடிவு முறையான வழியில் எடுக்கப்படவில்லை. ஆனால் தமிழ்பள்ளிகளில் திணிக்கப்பட்டன என்று இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வரும் மே19 இயக்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த மே19 தேதி, தமிழ்க்கல்வி ஆதரவாளர்களுடன் இருமொழி திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளில் இருந்து அகற்ற கோரி, ஒரு மாபெரும் கண்டன ஊர்வலத்தை மே19 இயக்கத்தினர் நடத்தினர். அதில் முக்கிய பங்குவகித்தவர்களில் ஒருவர்தான் தியாகு.

இவருக்கு ஆதரவாக இன்னும் சிலர் நடக்க முன்வந்துள்ளனர் என்று தியாகுவுடனிருந்து செயல்படும் கௌத்தம், தமிழிணியன், சிவா மற்றும் பாலமுரளி ஆகியோர் கூறுகின்றனர்.

இந்த நடைப்பயணம் 11.12.2017-இல் புத்ராசெயாவில் முடிவுரும் என எதிர்பார்கப்படுகிறது.