சிரிய ராணுவ தளத்தை தாக்கிய இஸ்ரேல்

சிரிய தலைநகர் டமாஸ்கசுக்கு வெளியே உள்ள ராணுவ நிறுத்தத்தில் நேற்றிரவு, நிலத்திலிருந்து நிலத்தைத் தாக்கும் ஏவுகணையை இஸ்ரேல் ஏவியதாக, சிரிய அரசு தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்துள்ளன.

இத்தாக்குதலால் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால், இரண்டு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் எதையும் உறுதிப்படுத்தவில்லை.

டமாஸ்கஸ் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு, இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக, சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இத்தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களின் அளவு குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அங்கு “பொருள் இழப்புகள்” ஏற்பட்டிருப்பதாக தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.

இத்தாக்குதல் அங்கிருந்த ஒரு ஆயுதக் கிடங்கை அழித்துவிட்டதாகவும், ஆனால் அந்த நிலையம் எந்த குழுவை சார்ந்தது என்ற தகவல் தெரியவில்லை என்றும் சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையத் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் ஏ எஃப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சிரியாவின் லெபனான் கூட்டாளியான ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்கள் பரிமாற்றப்படுவதை தடுக்க, ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் ஏற்கனவே தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரிய ஆய்வு மையத்தின் தகவல் படி, இத்தாக்குதல் டமாஸ்கசுக்கு தெற்கே சில மைல்கள் தூரத்தில் உள்ள எல்-கிஸ்வ என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.

சிரியாவில், ராணுவ முன்னிலையை இரான் நிறுவ இஸ்ரேல் ஒரு போதும் அனுமதிக்காது என இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹூ ஏற்கனவே எச்சரித்திருந்தார். -BBC_Tamil