ரஜினிக்கு இவ்வளவுதான் மக்கள் செல்வாக்கா?

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கருத்துக் கணிப்பில் ரஜினியின் செல்வாக்கு பிற நடிகர்களோடு ஒப்பிட்டால் மிகவும் குறைவாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.

இதுகுறித்த ஒரு சுவாரசிய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.

ராஜநாயகம் அணி

பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பில் கிடைத்த விவரங்கள் பற்றி, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். ராஜநாயகம் கூறியதாவது: இப்போது வாக்களித்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு அதிகம் பேர், தினகரனுக்குதான் வாக்களிப்போம் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

மற்றொரு சுவாரசியம்

இதில் மற்றொரு சுவாரசிய தகவலும் உள்ளது. நடிகர் விஷாலுக்கு 15.2 சதவீதம் மக்கள் ஆதரவு அளித்துள்ளார்களாம். இவர் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்து கடைசிவரை இழுபறிக்கு உள்ளாகி வேட்புமனு தள்ளுபடிக்கு ஆளானவர். மக்கள் கருத்தை வைத்து பார்த்தால் விஷால் போட்டியிருந்தால் களம் வேறு மாதிரி மாறியிருக்கும் என தெரிகிறது.

ரஜினிக்கு குறைவு

அதேபோல விஜய்க்கு 11.3 சதவீதமும், கமலுக்கு 10.7 சதவீதமும், ரஜினிக்கு 5.1 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது.இதில் கவனிக்க வேண்டியது ரஜினிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவுதான். ‘நீண்ட காலமாக’ அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக சொல்லி வரும் ரஜினி, விஷால், விஜய் போன்ற இளம் நடிகர்களைவிடவும் குறைவான அரசியல் செல்வாக்கு பெற்றுள்ளதாகவே இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

செல்வாக்கு இப்படி

ரஜினி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவர் அரசியலில் இறங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் வழி மீது விழி வைத்து காத்திருந்து ஏமாந்தனர். மக்கள் மன்றத்தில் ரஜினி அரசியல் செல்வாக்கு சரிந்துள்ளதால்தான் அவரும் அரசியலுக்கு வர தயங்குகிறாரோ என்ற கேள்விகளை எழுப்புகிறது இந்த கருத்து கணிப்பு.

-tamil.oneindia.com