ரவுப் தங்கச் சுரங்க வழக்கு: மேல்முறையீட்டு நீதிமன்றம் மலேசியாகினிக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது

 

மலேசியாகினி செய்தித்தளம், ரவுப் ஆஸ்திரேலியன் கோல்டு மைன் (ஆர்எஜிஎம்) க்கு ரிம200,000 இழப்பீடு வழங்கும்படி புத்ரா ஜெயாவில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நீதிபதி அபாங் இஸ்கந்தர் அபாங் ஹசிம் தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு அவதூறானது என்று கருதப்பட்ட மூன்று கட்டுரைகளையும் இரண்டு வீடியோக்களையும் வெளியிடுவதற்கான தடையுத்தரவையும் அனுமதித்தது.

மேலும், வழக்கின் செலவுத் தொகையாக ரிம150,000 – ஐ ஆர்எஜிஎம்முக்கு வழங்கும்படியும் மலேசியாகினிக்கு உத்தரவிடப்பட்டது. வழக்குரைஞர் சிசில் ஆப்ரகாம் ஆர்எஜிஎம்மைப் பிரதிநிதித்தார்.

தீர்ப்பை வழங்கிய அமர்வில் நீதிபதிகள் மேரி லிம் மற்றும் ஸுராயா ஓத்மான் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

உயர்நீதிமன்றம் மலேசியாகினிக்கு ஆதரவாக வழங்கியிருந்த தீர்ப்பைத் தள்ளுபடி செய்யும் முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டது என்று நீதிபதி ஸுரையா கூறினார்.

ரவுப் தங்கச் சுரங்கத்தின் நடவடிக்கைகள் பகாங், புக்கிட் கோமன் குடியிருப்பாளர்களை பாதிக்கிறது என்று மலேசியாகினியில் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் வீடியோக்களும் முரட்டுத்தனமாக இருந்ததோடு குற்றம் சாட்டும் மற்றும் கெடுதல் செய்கிற தொனியைக் கொண்டிருந்தன என்று நீதிபதி ஸுரையா கூறினார்.

உயர்நீதிமன்றமும் அக்கட்டுரைகள் அவதூறானவையாகக் கருதியது. ஆனால், ரேனோல்ட்ஸ் தற்காப்பு கோட்பாட்டின் கீழ் பொதுநலம் சார்ந்த பொறுப்பான எழுத்தாளரிசத்திற்கு விலக்கு உண்டு என்ற விதியைப் பயன்படுத்தியதில் நீதிபதி தவறிழைத்து விட்டார் என்றார் ஸுரையா.

இவற்றின் அடிப்படையில். ரவுப் தங்கச் சுரங்கத்தின் மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது என்று ஸுரையா கூறினார்.

மலேசியாகினி மேல்முறையீடு செய்யும்

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு பின்னடைவாகும், மலேசியாகினிக்கு மட்டுமல்ல, இதர செய்தியாளர்களுக்கும்கூட, என்று மலேசியாகினியின் முதன்மை ஆசிரியர் ஸ்டீபன் கான் இத்தீர்ப்பு பற்றி கருத்துரைக்கையில் கூறினார்.

மலேசியாகினிக்கு ஆதரவான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று கூறிய ஸ்டீபன், ரிம350,000 ஒரு பெருந்தொகை. மலேசியாகினி தற்காப்பு நிதிக்கு வாசகர்கள் மனமுவந்து நன்கொடை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மலேசியாகினி உச்சநீதிமன்றத்துக்கு (பெடரல் நீதிமன்றம்) மேல்முறையீடு செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.

மலேசியாகினிக்காக உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் இலவசமாக வழக்காடிய வழக்குரைஞர்கள் ஜேம்ஸ் கோங் மற்றும் ஷாரெட்ஸான் ஆகிய இருவருக்கும் ஸ்டீபன் நன்றி கூறினார்.

நன்கொடை அளிக்க:

Defend Malaysiakini Fund

Account name: Mkini Dotcom Sdn Bhd

Account no: 5142 5351 6714 (Maybank)

Swift Code: MBBEMYKL

Branch address: Dataran Maybank, Level 1 Tower A, Dataran Maybank, 59000 Kuala Lumpur.