தமிழக தேர்தல்களில் பணப்பட்டுவாடா மிகப்பெரிய சவாலாக உள்ளது: ஓம் பிரகாஷ் ராவத்

தமிழக தேர்தல்களில் பணப்பட்டுவாடா மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று இந்திய தேர்தல் தலைமை கமிஷனரான ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஏ.கே.ஜோதியும், தேர்தல் கமிஷனர்களாக ஓம் பிரகாஷ் ராவத் (ஓ.பி.ராவத்), சுனில் அரோரா ஆகியோரும் இருந்து வந்தனர்.

ஏ.கே.ஜோதியின் பதவி காலம் முடிவடைந்ததால் அவர் நேற்று (திங்கட்கிழமை) ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக, தேர்தல் கமிஷனர்களில் பதவிமூப்பு அடிப்படையில் ஓம் பிரகாஷ் ராவத் மத்திய அரசு புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமித்தது. அவர் நேற்று செவ்வாய்க்கிழமை தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டார். ஓம் பிரகாஷ் ராவத் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நான் ஆதரவு என தெரிவித்து உள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற போதும் பணப்பட்டுவாடாவை தடுத்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் பலன் அளிக்கும் விதமாக இருக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையையும் மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் இந்தியா முழுவதும் கவனம் பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் பணப்பட்டுவாடா மிகப்பெரிய சவாலாக உள்ளது என தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறி உள்ளார். ஓம் பிரகாஷ் ராவத் பேசுகையில், தமிழகத்தில் பணப்பட்டுவாடா மிகப்பெரிய சவாலாக உள்ளது; ஒரு கதவை அடைத்தால், வேட்பாளர்கள் வேறு ஒரு கதவை திறந்துவிடுகிறார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய வியூகங்களை கையாள வேண்டியுள்ளது என கூறி உள்ளார்.

-4tamilmedia.com

TAGS: