ஷாஹிட் : பழைய கதையை மறந்து, பி.என்.-னுக்கு இந்திய சமூகம் ஆதரவளிக்க வேண்டும்

வரவிருக்கும் ‘பெரு நாளில்’, பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திலான பாரிசான் நேசனல் (பி.என்.) அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு துணைப் பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி இந்திய மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

‘பெரு நாள்’ என்று 14-வது பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பேசிய அவர், பழையக் கதைகளை மறந்து, தற்போது அரசாங்கம் காட்டிவரும் அர்ப்பணிப்பைக் கருதி, இந்தியர்கள் பாரிசானுக்கு ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

“பழையக் கதைகளை நாம் மறைத்து வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய சமூகம் பழையப் புத்தகத்தை மூடவேண்டும்.

“ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்களை, உடன்பாடற்ற கருத்துகளை நாம் மறந்துவிட வேண்டும்,” என்று அவர் இன்று, பத்துமலை தைப்பூசக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட போது கூறினார்.

முன்னதாக, பத்துமலைக் கோயிலுக்கு இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட RM25 மில்லியனிலிருந்து, கூடுதலாக RM2 மில்லியன் ஒதுக்கீட்டையும் ஷாஹிட் அறிவித்தார்.

பத்துமலை கோவிலில் ஒரு கலாச்சார வளாகத்தை அமைப்பதற்காக, அந்தக் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்தியச் சமூகத்திற்குப் பல்வேறு சிறப்புத் திட்டங்களை நஜிப் செய்கிறார் என்றும் அவர் சொன்னார்.

எனவே, இன்னும் அதிக ஆதரவைப் பெற, நஜிப்பின் தலைமைக்கு வலுவான ஆதரவை வழங்குமாறு அவர் இந்தியர்களைக் கேட்டுக்கொண்டார்.

இதனை நீங்கள் செய்தால், அரசாங்கம் தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்றும்; எதிர்காலத்தில் இந்தியச் சமூகம் இன்னும் கூடுதலான உதவிகளைப் பெற ஆவன செய்வதை உறுதிபடுத்துமாறும் நான் பிரதமரிடம் இரகசியமாக கூறுவேன்,” என்றார், உள்துறை அமைச்சருமான ஷாஹிட் ஹமிடி.