கடப்பிதழுக்கு இலக்கு வைக்கும் திருடர்கள் – நூர் அஸ்மான்

வீடு புகுந்து திருடுபவர்கள் பெரும்பாலும் மலேசியக் கடப்பிதழுக்கு இலக்கு வைப்பதால், மலேசியர்கள் தங்களின் கடப்பிதழைப் பத்திரப் படுத்தி வைக்க வேண்டும் என்று பத்துமலை, தாமான் ஸ்ரீ கோம்பாக் வட்டார தன்னார்வ ஊர்க்காவல் படை(ருக்குன் தெத்தாங்கா)த் தலைவர் நூர் அஸ்மான் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

உலக அளவில் மலேசியக் கடப்பிதழுக்கு பெரும் மதிப்பிருக்கும் அதேவேளை, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வசதியையும் மலேசியக் கடப்பிதழ் கொண்டிருப்பதால், வீடு புகுந்து பொருட்களை அபகரிக்கும் திருடுடர்கள் பெரும்பாலும் மலேசியக் கடப்பிதழைத் திருடுவதில் முனைப்பு காட்டுகின்றனர்.

ஆளில்லாத வீடுகள், இரண்டொரு நாட்களுக்கும் மேலாக பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிடும் திருடர்கள், கும்பலாக செயல்படுகின்றனர். வெளியில் ஒருவரோ அல்லது இருவரோ கண்காணிப்பு வேலையில் ஈடுபடும் அதேவேளை தயார் நிலையில் காரில் ஓரிவர் காத்திருக்கும்படியான ஏற்பாட்டை செய்து கொண்டு திருடர்கள் சம்பந்தப்பட்ட வீட்டில் நுழைகின்றனர்.

அப்படி நுழைபவர்களின் முதல் இலக்கு பணம், ஆபரணத்தைவிட மலேசியக் கடப்பிதழாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மலேசியர்களைக் கேட்டுக் கொண்ட அஸ்மான், மலேசியக் கடப்பிதழ் காணாமல் போனால், அதை மீண்டும் பெறுவதற்கு குடிநுழைவு அலுவலகத்தில் போதிய விளக்கம் அளிக்க வேண்டி இருப்பதுடன் அபராதமும் செலுத்த வேண்டும். அதற்கும் மேலாக, காவல் நிலையத்திற்கு அலைய வேண்டியிருக்கு என்றும் குறிப்பிட்டார்.

இரண்டொரு நாட்களுக்கு மேல் வீட்டைப் பூட்டும் நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வட்டார ருக்குன் தெத்தாங்கா குழுவினரிடமும் அருகில் உள்ள காவல் நிலையத்திலும் தெரிவிக்கும்படியும் பொது மக்களை அறிவுறுத்தினார் அஸ்மான்.