ம.இ.ச. தலைவர் மோகன் ஷானுக்கு மலேசியத் தமிழர் களம் கடும் கண்டனம்!

கடந்த சில நாள்களுக்கு முன், மலேசிய இந்து சங்கம் மற்றும் மலேசியாவில் இயங்கும் அரசு சாரா தெலுங்கர், சீக்கியர், மலையாளிகள், வங்காளிகள், சிந்தியர்கள், மராட்டியர்கள், குஜராத்திகள் சங்கங்கள் இணைந்து பிரதமர் நஜிப்புக்குக் கொடுத்த மனுவில், ஏப்ரல் 14ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் இந்துப் புத்தாண்டு அல்லது இந்து விழாவாக அறிவித்து அதற்கு பொதுவிடுமுறையை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு ; அதனை அரசின் தேசிய நாள்காட்டியிலும் குறிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு மலேசியத் தமிழர் களம் (ம.த.க.) அமைப்பு இதர தமிழர் அமைப்புகளுடன் இணைந்து கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில்,  ம.த.க. அமைப்பின்  தேசியத் தலைமைப் பொறுப்பாளர் தமிழ்ப்புகழ் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியர்கள் என்ற கூட்டமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ள மேற்கண்ட இனங்களைப் பிரதிநிதித்து அவ்வினங்களைப் பிரதிநிதிக்கும் இயக்கங்களின் பொறுப்பாளர்கள் கூட்டாக அந்த மனுவில் கையொப்பமிட்டுள்ளனர். ஆனால், தமிழர்களைப் பிரதிநிதிக்கும் இயக்கங்களின் பிரதிநிதிகள் ஒருவர்கூட இதில் இடம்பெறாதது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருப்பதாகக்  கூறினார்.

“அதனிலும் வேடிக்கை, இதுவரை தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் நாளா என்ற வினாவுக்கு, சித்திரை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு என்று தொடர்ந்து தெரிவித்துவந்த மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான், இம்முறை அதை இந்துப் புத்தாண்டு என்று மனு கொடுத்திருப்பதுதான்.  அவருக்கு எதுவேண்டுமாயினும் புத்தாண்டாக பண்டிகையாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் தை முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகவும், தமிழர் திருநாளாகவும், தமிழர் இனத்தின் பெருவிழாவாகவும் மலேசியத் தமிழர்கள் மமட்டுமின்றி, உலகவாழ் தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர். அப்படியிருக்க, தொடர்ந்து தமிழர்களின் இனம் சார்ந்த பல விடயங்களில் முரணான கருத்துகளையேப் பரப்பிவந்துள்ள மோகன் ஷான் எப்படி மலேசியத் தமிழர்களுக்குத் தலைவர் ஆனார்,” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“அண்மையில் நடைபெற்ற தமிழர் கடவுளான முருகனின் தைப்பூச விழாவிலும் கிரகணம் தொடர்பில் டத்தோ மோகன் ஷான் கூறிய கருத்துகளை நம் நாட்டின் சைவசித்தாந்த பெருமக்கள் மறுத்து மறுமொழியிட்டதை நாம் அறிவோம்.  இத்தகைய சூழலில், பிரதமருக்குக் கொடுக்கப்பட்ட மனுவில் டத்தோ மோகன் ஷான், மலேசிய இந்து சங்கத் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளதோடு கூடுதலாக தமிழர்களின் தலைவர் என்று குறிப்பிட்டு கையொப்பமிட்டுள்ளார். அவரின் இந்த தான்தோன்றித்தனமான செயலை மலேசியாவில் செயல்படும் தமிழர் இயக்கங்களும் தமிழர்களும் வன்மையாகக் கண்டிப்பதோடு, மலேசியத் தமிழர்களின் தலைவராக உங்களை யார் தேர்வு செய்தது?”, என்ற கேள்வியையும்  அவர் முன்வைத்தார்.

“டத்தோ மோகன் ஷானின் செயல், ஒரு திட்டமிட்ட சதியாகவே நாங்கள் பார்க்கிறோம். மலேசியாவில் இன்று தமிழர்களின் பெரும் விழாவாக மீட்சி பெற்றுவரும் தமிழர் தை முதல் நாளுக்கே மலேசியத் தமிழர்கள் அரசுப் பொது விடுமுறையை எதிர்பார்த்திருக்கும் வேளையில், அதற்குக் கீழறுப்பு செய்யவே அவர் தன்னை மலேசியத் தமிழர்களின் தலைவர் என்று கூறிக்கொண்டு சித்திரைப்புத்தாண்டை முன்னிலைப்படுத்த முயல்வது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதற்காகவே இக்குழுவினர் தமிழர் இயக்கங்களை இதில் இணைத்துக் கொள்ளவில்லை என்பதும் தெளிவாகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மலேசியாவில் தொடர்ந்து தமிழர்களிடையே இனமீட்சி, பண்பாட்டு மீட்சி, சமய மீட்சி, வரலாற்று மீட்சி, பொருளாதார மீட்சி ஆகியவை தொடர்பான எழுச்சியினை மட்டுப்படுத்தவும் மடைமாற்றவும் பலர் தொடர்ந்து முயன்று வருகின்றனர். அவர்களைத் தமிழர் தேசியச் சிந்தனையாளர்கள் நன்கு அறிவர். அவர்களில் டத்தோ மோகன் ஷானும் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார் அவர்.

“எனவே, இனியும் தமிழர்களை ஏமாளிகள், கிள்ளுக் கீரைகள் என்று எண்ணி யாரும் விளையாட்டுக் காட்டவேண்டாம். இனியும் இத்தகைய செயல்களை யாரும் தொடர்ந்தால் சட்டப்படியான எதிர்விளைவுகளை அவர்கள் எதிர் கொள்ள வேண்டிவரும் என்று எச்சரிக்கிறோம்.

“இது தொடர்பாக மோகன் ஷான் உடனடியாக அம்மனுவை மீட்டுக் கொள்வதோடு, தமிழர் தலைவர் என்று தன்னை அறிவித்து ஏமாற்றுவேலை செய்தமைக்கு, மலேசியத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,”  எனவும் தமிழ்ப்புகழ் குணசேகரன் கேட்டுக்கொண்டார்.