நீங்கள் தமிழர் என்றால், தமிழருக்குப் பிறந்த நாங்கள் யார்?

– தமிழ்ப்புகழ் குணசேகரன், மலேசியத் தமிழர் களம் 

மலேசியத் தமிழர்களைப் பிரதிநிதிக்கும் அனைத்து தகுதிகளும் இந்து சங்கத் தலைவராக இருக்கக் கூடிய தனக்கு இருப்பதாக டத்தோ மோகன் சான் நாளிதழ் அறிக்கையில் கூறியிருப்பது, சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது.

இணையத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், மோகன் சான் அவர்கள், தன் தந்தை நாயர் சாதியைச் சார்ந்த மலையாளி என்றும், தன் தாயார் நாயுடு சாதியைச் சார்ந்த தெலுங்கர் என்றும் ஆனால் தனக்கு மலையாளமோ தெலுங்கோ பேசத் தெரியாது என்றும், தனக்குத் தமிழ் மட்டுமே தெரியும் என்பதால் தான் தமிழர் என்றும், அதனைக் கூறினால் தமிழர்களுக்கு விளங்கமாட்டேன் என்கிறது என்றும் புலம்பியிருக்கிறார். இவருக்கு மலாய், ஆங்கிலம் கூட தெரியாது என்றே நினைக்கிறேன்.

தன் பெற்றோர் தமிழர் அல்ல என்று கூறும் இவர்மட்டும் எப்படி தமிழரானார் என்பது, அவர் கூறுவது போல் தமிழர்களுக்கு விளங்கவில்லைதான் ! தமிழருக்குப் பிறக்காத இவர் தமிழர் என்றால், தமிழருக்குப் பிறந்த நாங்கள் இன அடையாளம் இல்லா நாதியற்றவரா?

எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காரணத்தைக் காட்டி, அதனால் தான் தமிழன் என்று கூறுவது கேவலமானது, கேளிக்குறியது.

மலேசிய இந்து சங்கம் எப்பொழுதெல்லாம் தமிழ் மொழிக்குச் சிக்கல் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் குரல் கொடுக்கத் தயங்கியதில்லை என்று கூறியுள்ளார். அது எப்போது என்றுதான் புரியவில்லை.

ஆனால், மொழியை மட்டுமே முன்னிலைப்படுத்தும் இவரும் இவரைப் போன்ற இனமறைப்பாளர்களும் தமிழர் என்ற இனத்திற்கான தன்னெழுச்சிக்கும் மீட்சிக்கும் என்றும் துணை நின்றதும் கிடையாது, இனி நிற்கப்போவதும் கிடையாது.

ஈழத்திலே பெருவாரியான இந்து நம்பிக்கையை ஏற்றிருந்த தமிழர்களைப் பௌத்த சிங்களவர்கள் கொன்றொழித்த போது இந்து சங்கம் அந்த இந்துக்களுக்காக என்ன போராட்டத்தை முன்னெடுத்தது என்று தெரியவில்லை.

இங்கு சிக்கல் என்னவென்றால், அவர்கள் கேட்ட விடுமுறையால் நமக்குச் சிக்கல் இல்லை, தை 1-க்குக் கிடைக்காத விடுமுறை தேவையும் இல்லை. ஆனால், தமிழரல்லாத மோகன் சான் மலேசியத் தமிழர்களைத் தன்மானமில்லாத முட்டாள்களாக எண்ணிக்கொண்டு, தான்தோன்றித்தனமாகத் தன்னைத்தானே தமிழர்களின் பிரதிநிதி என்று மலேசிய அரசிடம் நாடகம் ஆடியிருப்பது மன்னிக்க முடியாத தவறாகும். இதற்கு அவர் மன்னிப்பு கேட்காது மழுப்பலான பதிலைத் தருவது கோமாளித்தனம்.

இவ்வளவு எதிர்ப்புகள் தமிழர்களிடமிருந்து கிளம்பிய பின்னும், திமிராக மலேசியத் தமிழர்களைப் பிரதிநிதிக்கும் தகுதி தனக்கே இருக்கிறது என்று அவர் நாளிதழில் கூறியிருப்பது, ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களின் தன்மானத்தை உரசிப் பார்ப்பதே அன்றி வேறொன்றுமில்லை, இதனை மலேசியத் தமிழர் களம் வன்மையாகக் கண்டிக்கிறது.