உள்துறை அமைச்சு: அன்வார் ஜூன் 8 இல் விடுவிக்கப்படலாம், ஆனால் …

உள்துறை அமைச்சின்படி, எதிர்வரும் ஜூன் 8 இல், சுங்கைப் பூலோ சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிரணித் தலைவர் விடுதலை பெற முடியும்

அன்வாரின் தண்டனை மற்றும் அவரது நன்னடத்தைக்காக சிறைச்சாலைத் தண்டனையைக் குறைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்படும் நாள் ஜூன் 10 என்று எழுத்து மூலம் நாடாளுமன்றத்திற்கு அளித்த பதிலில் அமைச்சு கூறியது.

அது வார இறுதி நாளாக இருப்பதால், அன்வாரை வெள்ளிக்கிழமை (ஜூன் 8) விடுவிக்கலாம். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையை அமைச்சு அந்தப் பதிலில் கூறியுள்ளது.

ஒரு கைதியின் தண்டனை மற்றும் விடுவிக்கப்படும் நாள் அக்கைதி தவறு ஏதேனும் செய்தால் மாற்றப்படலாம். சிறைச்சாலை விதிகள் 2000 இன் கீழ் தண்டனை குறைத்தல் நீக்கப்படலாம்.

பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் கூய் ஹிசியாவ் லியங் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சு அப்பதிலை அளித்தது.

இவ்வருடம் ஜனவரியில், துணை உள்துறை அமைச்சர் நூர் ஜாஸ்லான் முகம்மட் வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில் அன்வார் வெளியிடும் ஊடக அரிக்கைகள் அவரது சிறைத்தண்டனையை பாதிக்கக்கூடும் என்று கூறியிருந்தார்.

அன்வார் வெளியிட்ட அறிக்கைகளில் பக்கத்தான் ஹரப்பான் முன்னாள் பிரதமர் மகாதிரை அதன் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்திருந்ததற்கு அன்வார் ஆதரவு அளித்ததும் அடங்கும் என்று நூர் ஜஸ்லான் கூறியிருந்தார்.

அன்வாரின் அறிக்கைகளை சிறைச்சாலை இலாகாவின் அனுமதியின்றி மூன்றாம் தரப்பினர் மூலம் வெளியிட்டிருந்தால், அது ஒரு குற்றமாகும் என்பதோடு அது சிறைத்தண்டனை காலத்தைப் பாதிக்கும் என்று நூர் ஜாஸ்லான் மேலும் கூறியிருந்தார்.