அரசியல்வாதியாக 100 சதவீதம் சிறப்பாக செயல்படுவேன் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

ரிஷிகேஷ்,

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்று உள்ளார். ரிஷிகேஷ் சென்ற நடிகர் ரஜினிகாந்த், தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 1995-ம் ஆண்டில் இருந்து  இமயமலைக்கு வருவேன். இடையில் பல காரணங்களால் என்னால் இங்கு வரமுடியவில்லை. ஒரு மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்வதுதான் அவனுடைய பிறவியின் முக்கிய வேலை. அதற்காகத்தான் இங்கு வருகிறேன். நிறைய தியானம் செய்வதற்காகவும், ஆன்மீக புத்தகங்கள் படிப்பதற்காகவும், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மக்களை சந்திப்பதற்காகவும் இங்கு வந்திருக்கிறேன். இங்கே எனக்கு சினிமா துறையினர், அரசியல்வாதிகள் யாரும் தேவையில்லை. மக்கள், இயற்கை போதும்.

இமயமலையை பற்றி நான் சொல்ல வேண்டிய தேவையில்லை. நான் இமயமலையையும், கங்கை நதியையும் மிகவும் நேசிக்கிறேன். நிறைய புனிதர்கள் இங்கு வாழ்கின்றனர். அவர்களை சந்தித்து ஆசி பெற்று என்னை புதுப்பித்துக்கொள்ள வந்திருக்கிறேன். நான் இங்கு வந்ததற்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் கடவுள் மீதான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அது மிக முக்கியமானது. கடவுள் மீது முழு நம்பிக்கை வைப்பதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் அவர்களுக்கு கற்றுத்தரவேண்டும். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்.

மக்களோடு மக்களாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். தமிழகத்தில் என்னால் சுதந்திரமாக வெளியே சென்று வரமுடியாத நிலையை எப்போதோ இழந்துவிட்டேன். இமயமலைக்கு முன்பு சுதந்திரமாக வந்து சென்றேன். இப்போது அதற்கான வாய்ப்பும் இல்லை என்பதை அறிகிறேன். வாழ்க்கையில் நிறைய இழந்து இருக்கிறேன். மக்கள் பணியில் நிறைய தியாகங்களை செய்ய வேண்டி இருக்கும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். மக்களுக்காக வாழ்வது மதிப்புமிக்கது. கடவுள் எனக்கு நடிகர் பாத்திரத்தை கொடுத்திருந்தார். அதை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறேன். தற்போது எனக்கு அரசியல் பாத்திரம் கொடுத்து இருக்கிறார். அதில் 100 சதவீதம் சிறப்பாக செயல்படுவேன்.

அரசியலை முன்னிட்டு இந்த ஆன்மீக பயணமா என்று கேட்கிறீர்கள். அப்படியும் இதை வைத்து கொள்ளலாம் என்று கூறினார்.

-dailythanthi.com