ஜோ லோ-வை ஆதரிப்பது துரோகம், அம்னோ மூத்தத் தலைவர் சொல்கிறார்

1எம்டிபி-உடன் தொடர்புடைய, தொழிலதிபர் ஜோ லோ-வை ஆதரிப்பது நாட்டையும்  அம்னோவையும் காட்டிக் கொடுப்பதற்கு ஈடானது என்று, அக்கட்சியின் மூத்தத் தலைவர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்னோ மூத்த உறுப்பினர்கள் இயக்கத்தின் செயலாளர் முஸ்தாபா யாக்கோப், இந்த ஊழல் பற்றி நன்கு அறிந்த கட்சி தலைவர்கள், அதில் சம்பந்தப்பட்ட ஜோ லோ-வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

“விவேகமான அம்னோ தலைவர் ஜோ லோ-வுக்கு ஆதரவு கொடுக்கமாட்டார்கள்.

“1எம்டிபி பணத்தைத் திருடியது ஜோ லோதான் என்பது உண்மையென்றால், அவருக்கு எதிராக, நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றே அவர்கள் விரும்புவார்கள்,” என்று அவர் சினார் ஹரியான்  பத்திரிக்கையிடம் கூறினார்.

இதற்கு முன்பு, அம்னோ தலைவர்களான ராய்ஸ் யாத்திம் மற்றும் ரஃபீடா அஜிஸ் ஆகியோர் ஜோ லோவுக்கு எதிராகப் பேசியது குறிப்பிடத்தக்கது.

அந்த இரு தலைவர்களும், இந்தோனேசிய அதிகாரிகள் 1எம்டிபியுடன் தொடர்புடைய ஓர் ஆடம்பரக் கப்பலையும் ஜோ லோவையும் கைப்பற்றியது தொடர்பில் வெளியான செய்தி, பொய்யான தகவல் என்று கூறிய தொலைத் தொடர்பு, பல்லூடக அமைச்சர், சாலே சைட் கெருவாக்கை விமர்சித்தனர்.

1எம்டிபி நிதியிலிருந்து திருடப்பட்ட 250 மில்லியன் அமெரிக்க டாலரில், ஜோ லோ ஆடம்பரக் கப்பலை வாங்கியதாக அவ்வறிக்கை கூறியுள்ளது.

1எம்டிபி தொடர்பான ஊழல் பல நாடுகளில் விசாரிக்கப்பட்டு வருகிறது, அமெரிக்க வழக்கறிஞரான ஜெஃப் செஸ்யன்ஸ் இதனை ‘ஆக மோசமான மோசடி வழக்கு’ என்று கருதப்படுவதாகக் கூறியுள்ளார்.

குறைந்தபட்சம் $4.5 பில்லியன் டாலர்கள் 1எம்டிபி நிதியிலிருந்து களவாடப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

1எம்டிபியில் திருடியப் பணத்தைப் பயன்படுத்தி வாங்கியதாகக் கருதப்படும் 1.7 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை மீட்டெடுக்க அமெரிக்க நீதித்துறை முயற்சித்து வருகிறது.

தனது நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளதை, 1எம்டிபி மறுத்துள்ளது.