டாக்டர் எம் : இசா சட்டத்தைப் பயன்படுத்தியதில் நஜிப்பும் பொறுப்பாளி

1987-ல் ‘ஓப்பராசி லாலாங்’ நடவடிக்கையின் போது, உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (இசா) கீழ், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதற்கு அரசாங்கத்தின் ஓர் உறுப்பினர் என்ற வகையில், நஜிப்புக்கும் பொறுப்புண்டு என்று டாக்டர் மகாதிர் கூறுகிறார்.

“இது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பு, நான் தவறு செய்ததாக அவர் நினைத்திருந்தால், என்னை விமர்சிக்கவோ அல்லது எதிர்த்துப் பேசவோ அவருக்குச் சுதந்திரமுண்டு,” என்று மகாதிர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் நஜிப், கலாச்சாரம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.

கடந்த வியாழனன்று, ‘ஒப்பராசி லாலாங்’கில், நூற்றுக்கணக்கான மக்களைக் காவலில் வைத்த மகாதீர் ஒரு கொடுங்கோலர் என்று நஜிப் குறிப்பிட்டு இருந்ததற்கு மகாதிர் இவ்வாறு பதிலளித்தார்.

“ஓப்பராசி லாலாங்கில் மக்களைக் கைது செய்தது யார்? நஜிப்பா அல்லது அந்த 93 வயதான முதியவரா?” என்று பேராக்கில் சுமார் 5,000 பொது மக்கள் கூடியிருந்த மண்டபத்தில் நஜிப் மகாதிரைக் கேலி செய்தார்.

2011-ல் நஜிப் இசா சட்டத்தை நீக்கினார்.