காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்க: சீமான் வலியுறுத்தல்

சென்னை : காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை கைது செய்து சிறையில் வைத்திருப்பது எந்த விதத்திலும் சரியானது அல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியான ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டி போராடியவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள் .

சென்னையில் காவிரி உரிமைக்காக கடந்த 10 ஆம் தேதி போராடிய உணர்வாளர்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படுவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கூட்டாக முன்னெடுப்பு

காவிரி நதிநீர் உரிமையில் மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழகத்தை வஞ்சித்துத் துரோகம் விளைவித்திருக்கையில் தமிழகம் அதற்கான உரிமை மீட்புப் போராட்டங்களில் களமிறங்கிக் கொந்தளித்துக் கிடக்கையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்துவது தமிழர்களின் உணர்வை உரசிப் பார்ப்பதற்கு ஒப்பானது எனக் கண்டனம் தெரிவித்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்கிற சென்னை, சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடுகிற அறவழிப்போராட்டத்தை அறிவித்து, எங்களது கூட்டமைப்பு சார்பாக அதனை முன்னெடுத்தோம்.

எதிர்வினைத் தாக்குதல்கள்

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடித் தாக்குதல் நடத்தியதும், ஒருசிலக் காவல்துறையினர் தாக்கப்பட்டதுமான நிகழ்வுகள் மிகுந்த மனவலியைத் தரும் சம்பவங்களாகும். காவல்துறையினர் தாக்கப்பட்டது திட்டமிடப்படாத எதிர்வினைத் தாக்குதல்கள்தான் என்றாலும் அச்சம்பவத்திற்கு உளப்பூர்வமான மன வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்.

பொறுப்புணர்வு கொண்டவர்கள்

நாம் தமிழர் கட்சியினர் என்றைக்கும் வன்முறைப்பாதையை விரும்பியதுமில்லை; அத்தகையப் போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கை கொண்டு பின்பற்றியதுமில்லை. நாம் தமிழர் கட்சியின் 8 ஆண்டுகாலப் போராட்ட வரலாறே அதற்குச் சாட்சியாகும். நாம் தமிழர் கட்சியின் போராட்ட வழிமுறைகளை பிறக் கட்சியினருக்கு முன்னுதாரணமாய் காட்டி காவல்துறையினரே பாராட்டுகிற அளவுக்கு மிகுந்தக் கட்டுக்கோப்போடும், ஒழுங்கோடுமே போராட்டங்களங்களில் நின்றிருக்கிறோம். சனநாயக நெறிமுறைகளுக்குட்பட்டு மிகக் கண்ணியமாகவும், மிகுந்தப் பொறுப்புணர்வோடுமே போராட்டங்களை வழிநடத்திச் சென்றிருக்கிறோம்.

ஜனநாயகப் படுகொலை

அப்படியிருக்கையில் எதிர்பாராத விதமாய் நடந்தேறிய அசம்பாவிதங்களுக்கு நாம் தமிழர் கட்சியைப் பொறுப்பாக்கி எமது கட்சியின் நிர்வாகிகளைத் தொடர்ச்சியாக நள்ளிரவில் கைதுசெய்வதும், விசாரணை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பெயர்களில் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்றுவரை விடுவிக்கப்படாததும் எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. நாம் தமிழர் கட்சியினர் ஒன்றும் வன்முறையாளர்கள் அல்லர்; மாண்புமிக்க சனநாயகத்தின் மீதும், அறவழிப் போராட்டங்களின் மீது மட்டுமே நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்ட அறநெறியாளர்கள; பொறுப்பணர்வு கொண்ட சமூக நோக்கர்கள். பெருத்த சனநாயக ஆற்றலாய் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிற சூழலில் எங்கள் கட்சியினர் மீது மேற்கொள்ளப்படும் இவ்வகை கைது நடவடிக்கைகள் யாவும் அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்.

தேவையற்ற வழக்குகள்

வழக்குகளையும், சிறையினையும் கண்டு நானும், எனது தம்பிகளும் ஒருபோதும் அஞ்சியதில்லை. அவைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு சட்டப்படியே மீண்டு வருகிறோம்.ஆனால், அதற்காக எமது கட்சியினர் மீது போலியான வழக்குகள் புனையப்படுவதையும், தேவையற்று சிறைப்படுத்தப்படுவதையும் ஒருநாளும் ஏற்க முடியாது. முதல் நாள் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடுதிரும்பிய மனிதநேய சனநாயகக் கட்சியின் தலைவர் தம்பி தமீமுன் அன்சாரி நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டு, அக்கட்சி உறவுகளும் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

உடனடியாக விடுதலை

போராட்டங்களில் பங்கேற்கவே செய்யாத அண்ணன் மன்சூர் அலிகான் என்னைக் கைதுசெய்யும் முயற்சிக்கு எதிர்ப்புதெரிவித்தார் என்பதற்காகவே சிறைபடுத்தப்பட்டதும் அவசியமற்றது. எனவே, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், காவிரி உரிமை மீட்புப்போராளிகளையும் பொய்யான வழக்குகளில் நள்ளிரவில் கைதுசெய்வதை தமிழகக் காவல்துறையினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், போலி வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: