பி.எஸ்.எம் : ஜிஇ14 ஹராப்பான் மற்றும் பாரிசானுக்கு இடையிலானது

தாங்கள் போட்டியிடவிருக்கும் இடங்களில் இருந்து, எதிர்க்கட்சி கூட்டணி விலகி இருக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்த மலேசிய சோசலிசக் கட்சிக்கு (பி.எஸ்.எம்.), ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டுமே தங்களால் வழங்க முடியும் என்று பிகேஆரின் ஆர் சிவராசா கூறியுள்ளார்.

சிலாங்கூர், பினாங்கு, கிளாந்தன், பேராக் மற்றும் பஹாங் ஆகிய இடங்களில் நான்கு நாடாளுமன்ற இடங்கள் மற்றும் 12 சட்டமன்றங்களில் தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதைப் பி.எஸ்.எம். உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று, பக்காத்தான் ஹராப்பானுக்கு அதன் ஆதரவை உறுதிப்படுத்திய பி.எஸ்.எம்., அதன் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் அக்கூட்டணியைப் போட்டியிட வேண்டாம் என்று வலியுறுத்தியது.

ஆனால், பெர்சத்து, டி.ஏ.பி மற்றும் அமானா ஆகிய கட்சிகளுடன் இடங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியம் காரணமாக, பி.எஸ்.எம்.-மிற்குக் கூடுதலாக வேறு இடங்களை வழங்க முடியாது என்று தற்போதைய சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான சிவராசா தெரிவித்தார்.

“ஒரு தேர்தலில் போட்டியிடும் உரிமை யாருக்கும் உள்ளது. இருப்பினும், வரவிருக்கும் தேர்தல், இரண்டு பிரதான சக்திகளான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனலுக்கு இடையேயான ஒரு கடும் போட்டியைப் பிரதிபலிக்கிறது.

“எனவே, அவர்கள் திட்டமிட்டுள்ள முறையில் பி.எஸ்.எம். வேட்பாளர்கள் களமிறங்கினால், அது வாக்குகளைப் பிளவுபடுத்தும், பி.என்.னுக்கு மட்டுமே பயன் அளிக்கும்.”

“கடந்த தேர்தலில், பி.எஸ்.எம். வேட்பாளர்கள் பல்முனையில் போட்டியிட்டதால், செமிஞ்சே மற்றும் கோத்தா டாமான்சராவில் பி.என். வெற்றி கண்டது.”

“பி.எஸ்.எம். வேட்பாளர் போட்டியிட, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மட்டுமே பிகேஆர்-ஆல் வழங்க முடியும், அதுவும் ஹராப்பானின் மற்ற உறுப்புக் கட்சிகளைப் போல, அவர்களும் பி.கே.ஆர். சின்னத்தையேப் பயன்படுத்த வேண்டும்,” என்று சிவராசா கூறினார்.

“கூடுதல் இடங்களை நாங்கள் வழங்க முடியாது,” என்றார் அவர்.

2008 மற்றும் 2013-ம் ஆண்டு தேர்தல்களில், பிகேஆர் டிக்கெட்டில் வெற்றிபெற்ற பி.எஸ்.எம்.-இன் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கிறார்.

“அதில் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். இருப்பினும், அவர்கள் பரந்த அளவில் பார்த்து, அதை ஏற்று, சுங்கை சிப்புட்டில் பி.என்.-உடன் நேரடி போட்டிக்குத் தயாராவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”

சுங்கை சிப்புட், கேமரன் மலை போன்று, தங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இடங்களில் போட்டியிட வேண்டாம் என நேற்று பி.எஸ்.எம். ஹராப்பானைக் கேட்டுக்கொண்டது.

ஜிஇ14 -க்குக்கான இருக்கைகள் பேச்சுவார்த்தைகளில் ஹராப்பான் பி.எஸ்.எம்.-ஐ கலந்தாலோசிக்கவில்லை எனவும் பி.எஸ்.எம். கூறியுள்ளது.