சிலாங்கூர் வேட்பாளர் பட்டியலை பிகேஆர் அறிவித்தது

நேற்றிரவு, கோல சிலாங்கூரில் நடந்த பக்காத்தான் ஹராப்பான் செராமாவில் சிலாங்கூர் மாநிலத்திற்கான பிகேஆர் வேட்பாளர்களை பிகேஆர் அறிவித்தது.

இருப்பினும், அந்த வேட்பாளர் பட்டியலில், கட்சியின் ஒரு தரப்பினர் திருப்தி கொள்ளவில்லையென செய்தி பரவியதைத் தொடர்ந்து, தனக்குத் தெரிந்தவரை வேட்பாளர் அறிவிப்பு இருக்காது எனக் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியிருந்தார்.

ஆனால், நடந்தது வேறு, பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஷிஷா பலரும் காத்திருந்த அந்த வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

அஸ்மின் அலி தனது முந்தைய தொகுதிகளான கோம்பாக் (நாடாளுமன்றம்) மற்றும் புக்கிட் அந்தாராபங்சா (சட்டமன்றம்) இரண்டிலும் போட்டியிடும் வேளை, பிகேஆரின் மகளிர் தலைவி ஷுராய்டா கமாருட்டின் அம்பாங்கிலேயே போட்டியிட உள்ளார்.

‘பெர்சே’ முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்ல, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத்தில் போட்டியிடவுள்ளார்.

பிகேஆரின் உதவித் தலைவரும் சிலாங்கூர் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான சேவியர் ஜெயக்குமார், ஶ்ரீ அண்டாலஸ் சட்டமன்றத்திலிருந்து, கோல லங்காட் நாடாளுமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னதாக, செராஸ் புனர்வாழ்வு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அன்வார் இப்ராஹிமை, அஸ்மின் அலி சந்தித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பு, 14-ம் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பானது என நம்பப்படுகிறது.

அன்வாரின் அந்த முன்னாள் செயலாளருக்கு, பிகேஆர் தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ள திட்டம் தெரியாது என ‘நன்ஞாங் சியாங் பாவ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சிவராசா சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் போட்டியிடவுள்ள வேளை, சிலாங்கூர் சட்டமன்றத்தில் சிவமலர் கணபதி (புக்கிட் மெலாவத்தி), டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் (செந்தோசா) ஆகியோரும் போட்டியிடவுள்ளனர்.

இதற்கிடையே, பாண்டான் நாடாளுமன்ற வேட்பாளர் யாரென்று அறிவிக்கவில்லை.

கடந்தப் பொதுத் தேர்தலில், பிகேஆர் அதிக பெரும்பான்மையில் அங்கு வெற்றி கண்டது. ஆனால், அத்தொகுதியின் எம்பி ரஃபிஷி ரம்லி இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

நிகழ்ச்சியின் முடிவில் கேட்டபோது, அவர் வேண்டுமென்றே பாண்டான் தொகுதி வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை என்றார்.

“நான் ரஃபிஷி பற்றி யோசிக்கிறேன். அது எளிதானது அல்ல (அவ்வாறு செய்வது), ஏனெனில், சட்டம் அவருக்கு ஆதரவாக இல்லை,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 14-வது பொதுத் தேர்தலில் தலைமைத்துவம் எடுக்கும் முடிவை, அனைத்து பிகேஆர் ஆதரவாளர்களும் ஏற்க வேண்டுமென டாக்டர் வான் அசிஸா கேட்டுக்கொண்டார்.

“வரவிருக்கும் ஜிஇ-ஐ எதிர்கொள்ளும்போது, பலரின் பெயர்கள் (கைவிடப்பட்டு) உள்ளன, சிலர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

“மறந்து விடாதீர்கள், இந்த இடத்திற்கு வர, நாம் பல தியாகங்களைச் செய்துள்ளோம்,” என சுமார் 5,000 பேர் கூடியிருந்த கோலா சிலாங்கூர் அரங்கில் அவர் பேசினார்.