பி.என். உடைந்தது, 13 உறுப்புக்கட்சிகளில் நான்கே எஞ்சியுள்ளன

14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் (பி.என்.) 13 உறுப்புக் கட்சிகளுடன் களமிறங்கியது.

இருப்பினும், கடந்த மே 9 தோல்விக்குப் பிறகு, ஒரே மாதத்தில், தற்போது அக்கூட்டணியில் 4 கட்சிகளே எஞ்சியுள்ளன.

1969-ல் நடந்த இனப் படுகொலை துயரத்திற்குப் பின்னர், ஆளுங்கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் இணைக்க, நாட்டின் இரண்டாம் பிரதமர் அப்துல் ரசாக் ஹுசேன் மேற்கொண்ட முயற்சியில், 1973-ஆம் ஆண்டு பிஎன் நிறுவப்பட்டது.

இருப்பினும், பிஎன் இப்பொழுது அவரது மகனும், நாட்டின் ஆறாவது பிரதமருமான நஜிப் ரசாக் கைகளாலேயே அழிக்கப்பட்டுவிட்டது.

பில்லியன் கணக்கான 1எம்டிபி ஊழலில் சம்பந்தப்பட்டிருந்த போதிலும், ‘மோசமான குணநலன்’ கொண்டவராக விவரிக்கப்பட்ட போதிலும், பிஎன்னின் தலைமை பொறுப்பில் நிலைத்திருப்பதில் நஜிப் முன்னர் உறுதியாக இருந்தார்.

மே 9-ம் தேதியன்று, 1957-ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து 61 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஎன், முதல் முறையாக அதன் அதிகாரத்தை இழந்தது.

சபா பாரிசான்

14-வது பொதுத் தேர்தலின் போது, அம்னோ மற்றும் மாநில அடிப்படையிலான கட்சிகளான பிபிஎஸ், பிபிஆர்எஸ், யுபிகோ மற்றும் எல்.டி.பி. ஆகியவை சபா பி.என்,-இல் உறுப்பியம் பெற்றிருந்தன.

சபா மாநிலம் மற்றும் மத்தியத்தில் பிஎன் தோல்வியுற்ற பின்னர், யுபிகோ பி.என்.னில் இருந்து விலகுவதாக முந்திக்கொண்டு அறிவித்தது.

அதன்பின்னர், அக்கட்சி பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பார்டி வாரிசான் சபாவுடன் (வாரிசான்) இணைந்துகொண்டது, புதிய சபா மாநில அரசாங்கத்தை உருவாக்க அவர்களுக்கும் பெரும்பான்மை தேவைப்பட்டது.

அதனை அடுத்து, யுபிகோ-வின் நடவடிக்கையை பின்பற்றி, பிபிஎஸ், பிபிஆர்எஸ் மற்றும் எல்.டி.பி. ஆகியவையும் பி.என்.-ல் இருந்து விலகின, அம்னோ மட்டுமே தனித்து விடப்பட்டது.

பிறகு, சட்டமன்ற உறுப்பினர்களில் பலர், ‘மண்ணின் மைந்தர்கள்’ எனும் அடையாளத்தை நிலைநாட்ட, அம்னோவில் இருந்து விலகி, பிபிஎஸ்-யில் இணைந்தனர்.

இதற்கிடையில், பிபிஎஸ், மற்றொரு எதிர்க்கட்சியான ஸ்டார்-உடன் இணைந்து, காகாசான் பெர்சத்து-ஐ உருவாக்கியது.

இவை அனைத்தும், பிஎன் தோல்வியைத் தழுவிய முதல் வாரத்தில் நடந்தது. சபா பிஎன் இல் எஞ்சியிருப்பது பலவீனமான அம்னோவும் சில தீபகற்பம் சார்ந்த கட்சிகள் மட்டுமே.

மசீச மற்றும் கெராக்கான் ஆகியவை சபாவில் இருந்தாலும், அவை பிஎன்-இன் முக்கிய உறுப்புக்கட்சிகளாக கருதப்படவில்லை.

சரவாக் பாரிசான்

சபாவுக்கு நேர்மாறாக, சரவாக் பி.என். அக்கூட்டணியில் இருந்து மிகவும் நேர்த்தியாக வெளியேறியுள்ளது.

சரவாக் முதல் அமைச்சர் பாத்திங்கி அபாங் ஜோஹரி ஓபேங் தலைமையிலான சரவாக் பி.என்., பிபிபி, எஸ்யுபிபி, பிஆர்எஸ் மற்றும் பிடிபி ஆகியக் கட்சிகள் பாரிசான் கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தன.

அவற்றுள் நான்கு கட்சிகள், ‘காபுங்கான் பார்டி சரவாக்’ எனும் மாநில ரீதியிலான கூட்டணியை உருவாக்க உள்ளதாக அறிவித்தன.

அக்கூட்டணி அரசாங்கம், பக்காத்தான் ஹராப்பானிடம் ஒத்துழைப்புடன் செயல்படும் என்று கூறிய ஜோஹாரி, ஆனால் அக்கட்சி அதன் சொந்த அமைப்பை உருவாக்கி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவே இருக்கும் என்றார்.

தீபகற்ப மலேசியாவில் பாரிசான்

அம்னோ, மசீச, மஇகா மற்றும் கெராக்கான் மட்டுமே, இன்று பாரிசான் கூட்டணியில் எஞ்சியிருக்கும் கட்சிகளாகும். மே 19-ம் தேதி, மைபிபிபி பாரிசானில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் எம்.கேவியஸ் அறிவித்தபோது, கட்சிக்குள் சில விவாதங்கள் ஏற்பட்டன.

கட்சியின் உயர் கவுன்சிலர்கள், கேவியஸ்-இன் அறிவிப்பைக் கேள்விக்குட்படுத்தியதால், பிஎன்-இல் மைபிபிபி-இன் உண்மை நிலை இன்னும் கேள்விக்குறியதாகவே இருக்கிறது.

மசீச, மஇகா மற்றும் கெராக்கான் இன்னும் பி.என். கூட்டணியிலேயே இருந்தாலும், அக்கூட்டணியில் தங்களுக்குள்ள நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய நினைக்கிறார்கள்.

பாரிசானின் முன்னணி கட்சியான அம்னோ, இப்போது ஒரு சில பங்காளிகளையே கொண்டிருக்கும் வேளையில், வேறு புதிய கூட்டாளிகளை அடையாளம் காணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.