கூட்டரசுப் பிரதேச அமைச்சை வைத்துக்கொண்டு ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது முரண்பாடானது- தெரேசா கொக்

சீபூத்தே  எம்பி    தெரேசா   கொக்,      கூட்டரசுப்   பிரதேச    அமைச்சராக     நியமிக்கப்படுவதாகக்    கூறப்படுவதை   மீண்டும்   மறுத்துள்ளார்.  மேலும்    அப்படி  ஓர்   அமைச்சே    தேவையற்ற   ஒன்று    என்றும்    அவர்   சொன்னார்.

ஊராட்சி  மன்றத்   தேர்தல்கள்   அமல்படுத்தப்படும்போது   அப்படி   ஓர்   அமைச்சர்    தேவையற்றவராகி  விடுவார்   என்றாரவர்.

பிரதமர்  டாக்டர்    மகாதிர்  முகம்மட்    விரைவில்   அறிவிக்கவுள்ள   இறுதி  அமைச்சரவை  பட்டியலில்    அவரது    பெயரும்  இருப்பதாக   த  மலேசியன்  இன்சைட்   “நன்கு    தகவலறிந்த   வட்டாரங்களை”   மேற்கோள்காட்டி   வெளியிட்டிருக்கும்    செய்தியை   தெரேசா   மறுத்தார்.

“என்  விருப்பம்  என்னவென்றால்,   நாட்டுக்கு   முதலீடுகளையும்   வணிகத்தையும்   கொண்டு  வரும்   அமைச்சில்  இருப்பதுதான்.  அதில்தான்   என்னால்    அதிகம்  பங்களிக்க   முடியும்  என்று   நினைக்கிறேன்”,   என்றவர்  மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

கூட்டரசுப்  பிரதேச (எப்டி)  அமைச்சராக    நியமிக்கப்படுவார்    என்று  கூறப்படுவது    குறித்துக்   கருத்துரைத்த     அவர்,   அப்படி   ஒரு  அமைச்சு   இருப்பது   ஊராட்சி  மன்றத்   தேர்தல்களை   நடத்தும்      பக்கத்தான்   ஹரப்பானின்  நோக்கத்துக்கு   முரணானது    என்றார்.

“எப்டி   அமைச்சை  வைத்துகொள்வதில்   எனக்கு  உடன்பாடில்லை.  வைத்துக்கொண்டால்,  ஊராட்சித்   தேர்தல்கள்   நடத்தும்போது     எப்டி-க்கு  இரண்டு   தலைவர்கள்   இருப்பார்கள்.  அதனால்  எப்டி  அமைச்சு   தேவையற்ற  ஒன்று”,  என்றார்.

அண்மையில்   வீடமைப்பு,  ஊராட்சி   அமைச்சர்   ஜூரைடா  கமருடின்,   அரசாங்கம்  மூன்றாண்டுகளுக்குள்     நாட்டின்   பொருளாதாரம்    மேம்பட்டதும்   ஊராட்சித்   தேர்தல்களை   நடத்தும்   என்று   கூறியிருந்தார்.