நஜிப் மக்களை முட்டாள்கள் என நினைக்கிறார் என்கிறார் மகாதிர், நஜிப் ஒன்றும் முட்டாளல்ல என்கிறார் கிட் சியாங்

1எம்டிபி -இல்  நிகழ்ந்த   பணப்பட்டுவாடாக்கள்   பற்றித்    தமக்கு   எதுவும்    தெரியாது  என்று   முன்னாள்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்  கூறியிருப்பதைப்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டும்   டிஏபி   ஆலோசகர்   லிம்   கிட்  சியாங்கும்  நிராகரிக்கின்றனர்.

அது  சாத்தியமல்ல    என்று  குறிப்பிட்ட   மகாதிர்    சம்பந்தப்பட்ட   ஆவணங்களில்   நஜிப்பின்   கையெழுத்து   உள்ளது    என்றார்.

“கையெழுத்திட்டிருக்கிறார்    என்கிறபோது   தெரியாது   என்று  சொன்னால்  யார்  நம்புவார்?

ஒருவர்  ரிம2  பில்லியனைத்  தம்    வங்கிக்  கணக்குக்கு   மாற்றிவிடச்  சொல்லி  உத்தரவு   இட்டுவிட்டு   அது   பற்றித்   தமக்கு  எதுவும்   தெரியாது  என்று  கூறுவது   நம்பக்கூடியதல்ல  என்று  மகாதிர்  மலாய்  மெயிலிடம்   கூறினார்.

“அது   சாத்தியமல்ல. ஏனென்றால்  பணத்தைப்  பயன்படுத்த  முனையும்போது  கையெழுத்திட   வேண்டும்,  காசோலைகளைக்  கொடுக்க  வேண்டியிருக்கும்.

“நஜிப்    மக்களை  முட்டாள்களாக   நினைத்துக்  கொள்கிறார்”,  என்று  மகாதிர்  கூறினார்.

இதனிடையே  லிம்,   நஜிப்பின்  கூற்று     அவரின்  பெயரை  மேலும்   கெடுப்பதாக  உள்ளது    என்றார்.

1எம்டிபி  முறைகேடுகள்  பற்றித்   தமக்கு  ஒன்றுமே   தெரியாது   என்று   அவர்  கூறிக்கொள்வது  மட்டும்  உண்மையாக   இருக்குமாயின்   முன்னாள்   பிரதமரே  உலகின்   திறமையற்ற   தலைவராக   இருக்க   வேண்டும்   என  டிஏபி   ஆலோசகர்  கூறினார்.

“நஜிப்பை   முட்டாளாக,  திறமையற்றவராக,   ஒன்றும்   அறியாதவராக  நினைக்க   மாட்டேன்.ஏனெனில்,   ராய்ட்டர்ஸ்   நேர்காணலில்    அவர்   சொன்னதெல்லாம்  பொய்யாகத்தான்  இருக்க  வேண்டும்”,  என்று  லிம்   ஓர்   அறிக்கையில்    தெரிவித்தார்.

நஜிப்  கூறுவதைப்  பார்த்தால்   பழியை  வேறு  யார்மீதோ  போடப்பார்க்கிறார்  என்று  தோன்றுவதாக    அவர்   சொன்னார்.

“1எம்டிபி  முறைகேடு  இருந்தது   உண்மை   ஆனால்  அதற்குத்   தாம்  பொறுப்பல்ல  வேறு   யாரோ   என்ற  நிலைப்பாட்டைக்  கைக்கொள்ள  முனைகிறாரா   நஜிப்?”,   என்று  லிம்  வினவினார்.