RM3 பில்லியன் நிதி தொடர்பில், தி.ஆர்.எக்ஸ்.சி. போலிஸ் புகார் செய்யும்

‘துன் ரஷாக் எக்ஸ்சேஞ்’ மேம்பாட்டுத் திட்டத்திற்காக 1எம்டிபி-ஆல் எடுக்கப்பட்ட நிதி தொடர்பில், தி.ஆர்.எக்ஸ். சிட்டி சென். பெர். (தி.ஆர்.எக்ஸ்.சி.) போலிஸ் புகார் செய்யவுள்ளது.

நேற்று, தி.ஆர்.எக்ஸ். மேம்பாட்டுத் திட்டத்திற்காக எடுக்கப்பட்ட RM3.07 பில்லியன், 1எம்டிபி-யால் தவறாக பயன்படுத்தப்படுவதாக, நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்ததைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நிறுவனம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, திஆர்எக்ஸ்-இன் முதன்மை மேம்பாட்டாளராக, அதன் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தி.ஆர்.எக்ஸ்.சி.-க்குப் போதுமான பணம் இல்லை.

தி.ஆர்.எக்ஸ்.சி.-யின் தலைமை நிர்வாக அதிகாரியான அஸ்மர் தாலிப் மற்றும் தலைமை இயக்குநர் தான் ஹூவா மின் இருவரையும், காவல்துறையிடமும் 1எம்டிபி விசேட புலனாய்வுக் குழுவிடமும் புகார் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு லிம் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 31, 2017 தொடக்கம், தி.ஆர்.எக்ஸ்.சி. நிதி அமைச்சின் கீழ் மாற்றப்பட்டது.

இதற்கிடையில், துன் ரசாக் எக்ஸ்சேஞ் மேம்பாட்டுத் திட்டத்தை நிறைவுசெய்ய, அமைச்சின் ஆதரவை வரவேற்பதாக அஸ்மர் தெரிவித்தார்.

“கே.எல்.-இல் புதிய சர்வதேச நிதியியல் மாவட்டமான தி.ஆர்.எக்ஸ்.-இல் நம்பிக்கை வைத்திருப்பதற்காக நாங்கள் அரசாங்கத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறோம். அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதால், வர்த்தக நிலைப்பாட்டை அது உறுதிப்படுத்தும், எங்கள் முதலீட்டாளர்கள் இந்த உறுதிப்பாட்டை சாதகமான முறையில் காண்பார்கள்.

“இந்தத் திட்டத்தின் மூலம் நாம் பல உலகத் தர முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுத்துள்ளோம். அரசாங்கத்தின் ஆதரவுடனும் எங்கள் பங்காளிகளின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பாலும், மலேசியா மற்றும் மலேசியர்களின் நலனுக்காக திட்டமிட்ட காலவரையில், பட்ஜெட்டில் இதனை நாங்கள் செய்து முடிப்போம்,” என்று அவர் கூறினார்.

கோலாலம்பூரின் வருங்கால வணிக மாவட்டமாக, நிதி சேவை நிறுவனங்கள், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான ஓர் ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற வணிகச் சூழலை உருவாக்குவதன் மூலம், தி.ஆர்.எக்ஸ். ஒரு முன்னணி சர்வதேச நிதி மற்றும் வணிக மையமாக மாநகரின் நிலையைப் பலப்படுத்தும்.

-பெர்னாமா