சர்கார் போஸ்டர் விவகாரம்: நடிகர் விஜய் – முருகதாஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

சென்னை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார்;. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்தடுத்த கட்டங்களாக இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு  முதல்  போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டது. முதன்முதலாக வெளியிடப்பட்ட போஸ்டரில், விஜய் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்தப் போஸ்டருக்கு பலரிடம் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக, பாமக தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சர்கார் போஸ்டரைக் கண்டித்து தங்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மேலும், படத்திலிருந்து அந்தக் காட்சியை நீக்குமாறு தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் புகையிலைத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு, விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பு  நிறுவனம் ஆகிய மூவருக்கும் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. புகை பழக்கத்தை இளைஞர்களிடம் இருந்து அறவே ஒழிக்க அரசு மேற்கொண்டு வரும் முதல் கட்ட முயற்சிக்கு திரையுலகினர் ஒத்துழைக்க வேண்டுமென பொது சுகாதாரத்துறை அண்மையில் கேட்டுக் கொண்டது.

இதன் எதிரொலியாக, படக்குழுவினரின் சமூகவலைத்தளங்களில் இருந்த சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு ரூ.10 கோடியை அரசுப் புற்று நோய் மருத்துவ மையத்துக்கு இழப்பீடாக வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பு நீருவனம், மத்திய, மாநில அரசுகள்  2 வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது.

-dailythanthi.com