14-ஆவது நாடாளுமன்றம்: எதிர்க்கட்சித் தலைவர் பதவிமீது பாஸ் மையல்

‘ஞாயிறு’ நக்கீரன், தேசிய முன்னணி நலிவடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பின்பால் பாஸ் கட்சிக்கு ஆவல் எழுந்துள்ளது. தேசிய முன்னணி, குறிப்பாக அம்னோ பலவீனமடைந்துள்ள தற்போதைய நிலையில், பாஸ் கட்சி இத்தகைய எண்ணத்தைக் கொண்டுள்ளது.

உலகமே வியந்து நோக்கிய அரசியல் சாதனையைப் படைத்த அரசியல் கூட்டணியான தேசிய முன்னணியின் அதிகார நாற்காலியை அறுபது ஆண்டுகளுக்குப் பின் கவர்ந்து கொண்ட நம்பிக்கைக் கூட்டணி தலைமையில் அடுத்த வார தொடக்கத்தில் நாடாளுமன்றம் கூட இருக்கிறது.

இந்த 14-ஆவது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிப்பவர் சிதைந்த தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ சாகிட் அமிடி என்பது உறுதியாகிவிட்டது.

48 ஆண்டுகளுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்ட லிம் கிட் சியாங், இந்த முறை ஆளுந்தரப்பில் இடம் பெற்றிருக்கிறார். மூத்த தலைவரான அவர், எந்தப் பொறுப்பும் வகிக்காமல் ஓர் அவதானியாக வீற்றிருந்து எதிர்க்கட்சியாக புது அவதாரம் ஏற்றுள்ள அம்னோவை கண்காணித்துக் கொண்டிருப்பார்.

மலேசிய அரசியல் மேடையில், தற்பொழுது அம்னோ ஏற்றிருப்பது புது வேடம். பரிச்சியமில்லாத இவ்வேடத்தை செவ்வனே செய்யப் போகிறதா அல்லது ஆட்சி கைமாறிப்போன ஆதங்கத்தில் தடுமாறி நிற்கப் போகிறதா என்பதை நாடாளுமன்றக் கூட்டத்தின்போது நாடு அறிந்து கொள்ளும்.

துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்த நேரத்தில், மக்கள் கூட்டணி துன் மகாதீர் தலைமையில் நம்பிக்கைக் கூட்டணியாக புது வடிவம் கண்டதுடன் வலிமையுடனும் காட்சி தந்ததை பொறுக்க மாட்டாமல் மிகக் கடுமையாக மகாதீரை விமர்சனம் செய்தார் சாகிட்.

டத்தோஸ்ரீ அன்வார் மீது மையம் கொண்டிருந்த வேகம், மகாதீர் பக்கம் திரும்பியதை நாம் புரிந்து கொள்ளலாம். அதற்காக, மலாய்க்காரர்கள் தங்களின் அரசியலையும் பிரச்சினையையும் ஓர் இந்தியரிடம் 22 ஆண்டுகளாக ஒப்படைத்து விட்டு ஏமாந்திருந்தனர் என்று மிகக் கடுமையாக சாடியதை நாடு அறியும். அத்துடன், ஓர் அடியாள அட்டையையும் வெளியிட்டு, மகாதீரின் தந்தை பெயரையும் குறிப்பிட்டு அவர் இந்திய வம்சாவளி என்றார். இதனால், என் உடம்பில் இந்திய இரத்தம் மிகமிக சொற்பமாகத்தான் ஓடுகிறது. ஆனாலும் நான் மலேசியர்தான் என்று மகாதீர் விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு கட்டமும் நேர்ந்தது.

நம்பிக்கைக் கூட்டணி எப்படியும் ஆட்சிக்கு வர முடியாது. தட்டுத் தடுமாறியேனும் தேசிய முன்னணி ஆட்சியைத் தக்க வைத்து கொள்ளும் என்று சாகிட் முழுதாக நம்பினார். அதனால்தான், ஜூன் 8-ஆம் நாள் அன்வார் விடுதலை ஆவார் என்று தகவல் வெளியானபோது சற்று மகிழ்ச்சி அடைந்த பிகேஆர் கட்சியினரின் மனதையும் அடுத்த நாளே சாகிட் ஓர் அறிக்கை மூலம் நொறுக்கினார். ஜூன் 8-இல் அன்வார் விடுதலை ஆவார் என்பது இன்னும் உறுதியாக வில்லை என்று அப்போதைய உள்துறை அமைச்சருமான அவர் அறிவித்தார்.

இப்போது, அதே ஜூன் 8-ஆம் நாளில் இவர் எதிர்க்கட்சித் தலைவரானது காலம் செய்த கோலம்தான்.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியின்மீது பாஸ் கட்சியும் மையல் கொண்டுள்ளது. சுழற்சி முறையில் பாஸ் கட்சிக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை பாஸ் மறைமுகமாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சிறகொடிந்த பறவையாக இருக்கும் அம்னோ, இந்த வாய்ப்பை பாஸ் கட்சிக்கு அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சுழற்சி முறை மலேசிய நாடாளுமன்றத்திற்கு ஒன்றும் புதிதல்ல. காத்திருப்போம் நாளையப் போக்கு எப்படி அமையும் என்பதைக் காண..!