பலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் மத்திய அரசின் வரைவு திட்டம் தயார்

புதுடெல்லி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டுவந்தது. பாலியல் சம்பவங்களை விரைவாக விசாரிப்பதும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதும் என்பதும் முக்கியமாக இடம்பெற்று இருந்தது. சட்டத்தின் ஒரு பகுதியாக, பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உள்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்திய பிறகு, இதற்கான வரைவு திட்டத்தை மத்திய சட்ட அமைச்சகத்தில் உள்ள நீதித்துறை தயாரித்துள்ளது.

இதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தவுடன், விரைவு கோர்ட்டு அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–

  • 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை.

  • 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப வாழ்நாள் சிறை தண்டனை அல்லது தூக்கு தண்டனை.

(தற்போது 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வழக்குகளில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக வாழ்நாள் சிறை தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது.)

  • 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை.

  • 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் அதற்கு தற்போது வழங்கப்படும் 10 ஆண்டு சிறை தண்டனை 20 ஆண்டுகளாக, இரட்டிப்பாக்கப்படுகிறது. இதை வாழ்நாள் சிறை தண்டனையாகவும் நீட்டிக்க வகை செய்யப்பட்டு இருக்கிறது.

  • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்கச் செய்யும் வகையில், அவை தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் 2 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்கவேண்டும்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் மேல்முறையீடு மனுக்கள் 6 மாதத்துக்குள் முடித்து வைக்கவேண்டும்.

16 வயதுக்கு உட்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கிடையாது. இதில் ஜாமீன் மனு மீது முடிவு எடுப்பதற்கு 15 நாட்கள் முன்பாக அரசு தரப்பு வக்கீலுக்கும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பவேண்டும்.

அவசர சட்டத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் விசாரணை குறித்தும் விரிவாக கூறப்பட்டது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச ஐகோர்ட்டுகளில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படும். இந்த வழக்குகளை கையாள அரசு தரப்பில் சிறப்பு வக்கீல்கள் நியமிக்கப்படுவார்கள். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறப்பு தடயவியல் கருவிகள் வழங்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணைக்காக குறிப்பிட்ட காலத்திற்கான சிறப்பு விசாரணை குழு உருவாக்கப்படும். இந்த குழுவில் விசாரணைக்கு தேவைப்படும் அளவிற்கு ஏற்ப மனித சக்தி பயன்படுத்தப்படும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வழக்குகளின் விசாரணைக்காக சிறப்பு தடயவியல் ஆய்வு கூடங்கள் அமைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 3 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். தேசியகுற்ற ஆவணக்காப்பகம் பாலியல் வன்முறை குற்றவாளிகள் பற்றிய தகவல்களை தொகுத்து வைக்கும். இது தொடர்பான தகவல்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினருடன் தேவைப்படும்போது பகிர்ந்து கொள்ளப்படும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையம் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படும். இவ்வாறு அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

-dailythanthi.com

TAGS: