முள்ளிவாய்க்காலில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலை புலிகளின் ஆயுதங்கள்!

இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்றைய (10.07.2018) தினம் இடம்பெற்ற ஆயுத வேட்டையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையொன்றும், ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

கறுப்பு யூலை என அழைக்கப்படும் தமிழனப் படுகொலையின் 35 வருடங்கள் பூர்த்தியடைவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடக்கில் பாரிய அளவில் ஆயுதங்களைத் தேடும் வேட்டைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக விசேட தேடல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விமானப்படையினை சேர்ந்த மூன்று பேர் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் தங்கத்தை தேடி அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது இவர்களை கைது செய்த பொலிசார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

குறித்த பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் பொலிசார் தேடல்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது விடுதலைப்புலிகளின் சீருடை ஒன்றும் தமிழன் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக முல்லைத்தீவில் இதுவரை நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணி இடம்பெறும் போது அந்த பகுதிகளில் முன்னதாகவே சட்டவிரோத அகழ்வுகள் இடம்பெற்று இருப்பதும் தோண்டும் போது எதுவும் கிடைக்கப்பெறாமல் தோல்வியடைவதும் வழமையாக இடம்பெறும் சம்பவங்களாக மாறியுள்ளன.

இதனால் குறித்த பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கின்ற பொருட்களை ஏற்கனவே எடுத்துவிட்டு அந்த இடம் தோண்டியதை சட்டபூர்வமாக்க நீதிமன்றின் அனுமதியுடன் தோண்டப்படுகிறதா என்று சந்தேகமும் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடுவதாகக் கூறி சட்டவிரோத தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படையினை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு இரு நாட்களுக்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஏராளமான ஆயுதங்கள் சீருடைகள், கொடியுடன் ஒட்டுசுட்டானில் பலர் கைது செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: