மக்களவையில் வாதங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம்: மகாதிர் உத்தரவாதம்

மக்களவையில்   வாதங்களுக்குக்  கட்டுப்பாடு  விதிக்கப்படாது   என்று  பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்    கூறினார்.

“நாளை (விவாதங்கள்  தொடங்கும்போது)   அதைக்  காண்போம்.

“வாதங்களைக்  கட்டுப்படுத்தக்கூடாது   என்பதுதான்  எங்கள்  கொள்கை. என்ன  சொல்ல   விரும்புகிறீர்களோ   அதைச்  சொல்லலாம்”,  என  இன்று   பிற்பகல்   நாடாளுமன்றத்தில்    செய்தியாளர்களிடம்   அவர்   கூறினார்.

நாளை   என்னென்ன   சட்டவரைவுகள்   மக்களவையில்   முன்வைக்கப்படும்   என்று  வினவியதற்கு   அந்தப்    பட்டியலை  இன்னும்   பார்க்கவில்லை    என்றாரவர்.

என்றாலும்,  அரசாங்கம்  ஜிஎஸ்டி  சட்டம்   இரத்துச்   செய்யப்படுவதை  உறுதிப்படுத்தும்.

“இப்போது  சுழியம்  விகித   ஜிஎஸ்டிதான்  நடப்பில்   உள்ளது.   நாடாளுமன்றம்  அதை   முற்றாக   எடுத்துவிடுவதை   உறுதிப்படுத்த    வேண்டும்”,  என்றார்.

செப்டம்பர்  மாதம்   ஜிஎஸ்டிக்குப்   பதிலாகக்     கொண்டுவரப்படும்   என்று எதிர்பார்க்கப்படும்   விற்பனை,  சேவை  வரி (எஸ்எஸ்டி)  குறித்துக்   கூறப்படும்   குறைகூறல்களுக்கும்   மகாதிர்   பதிலளித்தார்.

“நீங்கள்  பொருள்  வாங்கவில்லை   என்றால்  அந்த   வரி (எஸ்எஸ்டி)  செலுத்த   வேண்டியதில்லை.

“ஜிஎஸ்டி  என்றால்  மூல  இடத்திலேயே  வரி  விதிக்கப்படுகிறது.  இதனால்   எல்லாப்  பொருளின்  விலையும்  உயர்கிறது”,  என்றார்.

நேற்று  நிதி  அமைச்சர்   லிம்   குவான்   எங்,   எஸ்எஸ்டி   பொருள்களுக்கு  10 விழுக்காடாகவும்   சேவைகளுக்கு   6 விழுக்காடாகவும்  இருக்கும்   என்று    அறிவித்ததை   அடுத்து   அதற்கு   எதிராகக்  கண்டனங்கள்  கிளம்பின.

ஜிஎஸ்டியின்கீழ்   பொருள்கள்,    சேவைகள்   இரண்டுக்குமே  6 விழுக்காடுதான்  வரி,  இப்போது   10 விழுக்காடு,  6விழுக்காடு  என்கிறபோது  முன்பு   உயர்ந்ததைவிட  விலைகள்    கூடுதலாக   உயரும்  என்று  சமூக  வலைத்தளங்களில்   குறைகூறப்பட்டது.