பிரதமர்துறையை உலுக்கிய ரிம3.5மில்லியன் ஊழல்

14வது  பொதுத்   தேர்தல்  நிதியில்  ரிம3.5 மில்லியனைத்    தவறாகப்   பயன்படுத்திக்  கொண்டார்கள்    என்ற    சந்தேகத்தின்பேரில்   பிரதமர்துறையின்  17  பாதுகாவலர்களை  எம் ஏசிசி  கைது    செய்துள்ளது.

நேற்று  கைதான    17  பேரும்  இன்று  காலை   விசாரணைக்காக  5 நாள்களுக்குத்   தடுத்து  வைக்கப்பட்டனர்.

ஓர்  உயர்   பாதுகாப்பு   அதிகாரியும்  16  பாதுகாவலர்களும்   அடங்கிய    அந்த  17  பேரும்,  தேர்தல்   நிதியைச்   சொந்தத்துக்குப்   பயன்படுத்திக்  கொண்டதாக   சந்தேகிக்கப்படுகிறது.

31வயதுக்கும்   51 வயதுக்குமிடைப்பட்ட   அவர்கள்  அனைவரும்   நேற்று   பிற்பகல்  மணி   2.45க்கும்  3.15க்குமிடையில்    புத்ரா  ஜெயாவில்   எம்ஏசிசி    தலைமையகத்தில்  தனித்  தனியே    கைது   செய்யப்பட்டதாக  ஒரு   வட்டாரம்   தெரிவித்தது.

எம்ஏசிசி  துணை  ஆணையர்( நடவடிக்கைகள்)  அஸாம்  பாகி   கைது    நடவடிக்கையை   உறுதிப்படுத்தினார்.

கைதானவர்களிடமிருந்து   ரிம840,700  ரொக்கமும்  ரிம90,000   மதிப்புள்ள   மோட்டார்  சைக்கிள்களும்  கைப்பற்றப்பட்டன.