நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை, நடிகர் கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம்-2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்-2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்து மற்றும் கமல் எழுதியுள்ளனர். இந்த திரைப்படம் வரும் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதற்கிடையில்,  கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரமிட் சாய்மீரா என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்காக மர்மயோகி என்னும் படத்தினை கமல் நடித்து இயக்குவதாக இருந்தது. இதற்காக அவருக்கு ரூ.4 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டிருந்தது.

பல்வேறு காரணங்களால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஆனால் அதற்காக முன்பணமாக கொடுக்கப்பட்டிருந்த ரூ.4 கோடியினை கமல் திருப்பிக் கொடுக்கவில்லை. அந்தத் தொகையானது தற்பொழுது வட்டியுடன் சேர்த்து ரூ.8.44 கோடியாக உள்ளது. எனவே அந்தப் பணத்தினை முழுமையாக அவர் திருப்பிக் கொடுக்காமல், அவரது விஸ்வரூபம்-2 திரைப்படத்தினை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. மர்மயோகி படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கமல் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்று, விஸ்வரூபம்-2 படத்திற்கு தடைவிதிக்கக்கோரிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் மனுவை  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

-dailythanthi.com