தொழிலாளர்களுக்கு RM1500 குறைந்தபட்ச சம்பளமாக அறிவிக்கப்பட வேண்டும், பிஎஸ்எம் கோரிக்கை

மலேசியாவில் குறைந்தபட்ச சம்பளச் சட்டம் 2012-ல் இயற்றப்பட்டு, 2013-ன் தொடக்கத்தில் அமலுக்கு வந்தது. மலேசியாவில் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தைச் சட்டமாக்க, 20 வருடத்திற்கும் மேலாக பல குழுக்கள் போராடிய பின்னரே இச்சட்டம் அமலாக்கம் கண்டது.

1998-ல் தொழிலாளர்கள் குறைந்தபட்ச சம்பள பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, அப்போதிருந்த வாழ்க்கை செலவினத்திற்கேற்ப வைக்கப்பட்ட கோரிக்கை தொகைதான் RM900 ரிங்கிட். ஆனால், 2013-ல் இந்தத் தொகையில்தான் குறைந்தபட்ச சம்பளம் தொடங்கியது. அதிலும் தீபகற்ப மலேசியாவிற்கு ஒரு தொகை, சபா, சரவாக்கிற்கு வேறொரு தொகை என பாரபட்சத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தீபகற்ப மலேசியாவிற்கு RM900-ஆகவும், சபா சரவாக்கிற்கு RM800 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. அதே சமயம், 2 வருடத்திற்கு ஒரு முறை குறைந்தபட்ச சம்பளம் மறுபரிசீலனை செய்யப்படும், உயர்த்தப்படும் என்ற உத்தரவாதமும் சட்டத்தில் இருந்தது.

அதன் அடிப்படையில் பார்த்தால், 2015-ல் புதிய தொகையை அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் திறனற்ற நிர்வாக முறையினால், மறுபரிசீலனை தாமதமாக்கப்பட்டது. இரண்டு வருட காலம் முடிந்து, 18 மாதங்கள் தாமதமாகி, ஜூன் 2016-ல் புதியத் தொகை அறிவிக்கப்பட்டது. அதாவது, தீபகற்ப மலேசியாவிற்கு RM1000-ஆகவும், சபா சரவாக்கிற்கு RM920-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தாமதமாக்கப்பட்ட மாதங்களின் பின்தேதியிட்ட தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இப்போது மீண்டும் நாம் குறைந்தபட்ச சம்பளத் தொகை பரிசீலனை காலகட்டத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. நவம்பர் 29, 2017-ல், மனிதவள அமைச்சின் தேசிய சம்பள ஆலோசனைக் குழுவிடம், தொழிலாளர்களுக்குப் புதிய குறைந்தபட்ச சம்பள தொகையாக RM1500 நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். அதே சமயம், இந்தத் தொகை தீபகற்ப மலேசியாவிற்கும், சபா சரவாக்கிற்கும் சரிசமமாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.

ஏன்  RM1500 ஒரு நியாயமான கோரிக்கை?

1. உற்பத்தி அதிகரித்துள்ளது

அரசாங்க புள்ளிவிபரத்தின்படி, 2017 மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதாரம் அல்லது உற்பத்தி அளவு 6.2 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதைக் காட்டுகிறது. மேலும்,  நாட்டின் உற்பத்தி நிர்வாகமோ, தொழிலாளர்களின் உற்பத்தி 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும், 2016-ஆம் ஆண்டில் 3.5 விழுக்காடு ஏற்றம் கண்டிருப்பதாகவும் கூறுகிறது.  இதனால், தனிநிர்வாகங்களின் இலாபமும் அதிகரித்துள்ளது. ஆக, தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு கொடுப்பது ஒரு சுமையாக இருக்க முடியாது.

(sumber: http://www.bnm.gov.my/files/publication/qb/2017/Q3/p3_bm.pdf).

2. உண்மையான சம்பள உயர்வு மிகக்குறைவு

ஆனால், தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படுகிறதா? மலேசியாவின், 11-ஆவது திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஊதிய குறியீட்டின்படி, 2016-ல், செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை, 0.3 விழுக்காடு மட்டுமே சம்பளம் உயர்ந்துள்ளதாக காட்டுகிறது. ஆக, உற்பத்தி அதிக அளவில் உயர்ந்திருந்தும், தொழிலாளர்களின் சம்பளம் அந்த அளவிற்கேற்ப உயரவில்லை என்பதையே இது காட்டுகிறது.

3. நிர்வாக அதிகாரிகளின் சம்பளம் வானளவு அதிகமாக உள்ளது

ஓர் ஆய்வின்படி (‘Robert Walker Global Salary Survey, 2016’), ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேல்மட்ட அதிகாரிகள் மாதத்திற்கு RM45,000-த்திற்கும் மேலாக சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை தற்போதுள்ள குறைந்தபட்ச சம்பளத்தைவிட 45 மடங்கு அதிகமாக உள்ளது. இந்நிலைதான் ஏழை, பணக்காரர்களின் வருமான இடைவெளிக்குக் காரணமாக அமைகிறது. இந்த இடைவெளி குறைக்கப்பட வேண்டுமாயின், தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்; அதே வேளையில் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் இதர மேல்மட்ட அதிகாரிகளின் சம்பளங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

இதற்கு முக்கியக் காரணம், ஒரு சராசரி தொழிலாளி தனது சம்பளத்தின் பெரும்பகுதியைப் பல அன்றாட தேவைகளுக்குச் செலவிடுகிறான். இதனால், பொருளாதாரம் வளமடைகிறது. ஆனால், மேல்மட்ட வர்கத்தினர் தங்களின் பெரிய வருமானத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.  அதாவது 20 விழுக்காடு பணக்காரர்கள் 10 விழுக்காடு வருமானத்தையே  சாப்பாட்டிற்காக செலவிடுகின்றனர். ஆனால், 40 விழுக்காடு ஏழை மக்கள் தங்களின் வருமானத்திலிருந்து 30 விழுக்காட்டிற்கும் மேல் சாப்பாட்டிற்குச் செலவிடுகின்றனர். பொருளாதாரச் சுழற்சிக்கு இந்த ஏழை மக்கள்தான் அதிகப் பங்களிக்கின்றனர். ஆனால், இவர்கள் கையில் இருக்கும் பணமோ சிறிய தொகையே. நிலமை இப்படி இருந்தால், நாட்டின் பொருளாதாரத்தை எப்படி விரிவடைய செய்ய முடியும்? ஆக, ஏழை பணக்கார வருமான இடைவெளியைக் குறைக்க வேண்டுமானால் B40 வர்க்கத்தின் சம்பளத்தை உயர்த்த வேண்டும். அதற்கு நாம் முன்வைக்கும் கோரிக்கை குறைந்தபட்ச சம்பளம் RM1500-ஆக உயர்த்தப்பட வேண்டும் என்பதாகும்.

4. சம்பள உயர்வு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்

தொழிலாளர்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதனால் உள்நாட்டு சந்தையின் பொருளாதாரம் வழுவடையும். உள்நாட்டு உற்பத்தி அதிகாரிப்பு நாட்டில் வீழ்ச்சி ஏற்படும் நேரத்தில், பொருளாதாரத்தை வளர்க்க உதவும்.

5. மக்கள் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளது

2015-ல், பொருள், சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலாக்கம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை, எல்லாப் பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகாரித்துள்ளது. பெட்ரோல் விலை ஏற்றமும் தொடர்ந்து மக்களுக்குச் சுமையாகி வருகிறது.

கடந்த மார்ச் 2017-ல், மலேசியப் புள்ளிவிபர இலாகாவின் அறிக்கைப்படி, பயனீட்டாளர் விலை 5.1 விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளது. கடந்த 8 வருடத்தில் இதுதான் ஆகப் பெரிய உயர்வாகும்

 (sumber: https://moshed.com/kos-sara-hidup-di-malaysia-meningkat-harga-pengguna-capai-rekod-tertinggi/).

இதற்கிடையே, மலேசியப் புத்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முகமட் பாஸ்லி சப்ரி மேற்கொண்ட ஓர் ஆய்வில், தலைநகரில் வாழும் 60 விழுக்காடு மக்கள், வாழ்க்கை செலவின உயர்வால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார். (sumber: https://www.malaysiakini.com/news/383997). இச்சூழ்நிலையில், குறைந்தபட்ச சம்பளம் RM1,000 மற்றும் RM920-யை வைத்துகொண்டு, நம்மால் எப்படி வாழ முடியும்?

இதனைத் தொடர்ந்து, பி.எஸ்.எம். தனது கிளைகளின் உதவியுடன் நாட்டிலுள்ள மக்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேர்காணல் செய்யப்பட்டனர். அந்த ஆய்வின் முடிவில் நமக்கு தெரிய வந்த விபரங்கள் பின்வருமாறு :-

அ)    ஆய்வு செய்யப்பட்ட மக்களில் 73 விழுக்காட்டினரின் குடும்ப வருமான RM3,000-திற்கும் கீழ்;

ஆ)   அதில் 60 விழுக்காடு தொழிலாளர்களின் செலவு வருமானத்தையும் தாண்டிச் செல்கிறது;

இ)    33 விழுக்காடு தொழிலாளர்கள் கடன் வாங்கித்தான் அன்றாட வாழ்க்கையைச் சமாளிக்கின்றனர்;

ஈ)    83 விழுக்காடு தொழிலாளர்களுக்கு அவசரத்திற்கு உதவ சேமிப்பு இல்லை;

உ)    50 விழுக்காடு தொழிலாளர்கள் தங்களின் வருமானத்தில் 40 விழுக்காட்டை உணவிற்காக செலவிடுகின்றனர். ஆக, பொருள்களின் விலை உயர்வு இவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக, ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஒரு குடும்பத்தில் இருவர் வேலை செய்தாலும், குடும்ப வருமானம் RM3,000-த்தை எட்டவில்லை. ஆனால், அவர்களின் செலவோ அதற்கும் மேல் செல்கிறது. இதுவே இன்று பலர் கடன் தொல்லையில், வட்டி முதலைகளிடம் மாட்டிக் கொண்டிருப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

மேலும், 2017-ஆம் ஆண்டு, நவம்பர் 4-லிருந்து 14-ஆம் திகதி வரை ‘மெர்டேக்கா சென்டர் ‘ மேற்கொண்ட ஆய்வில், மக்களில் சுமார் 1,203 பேர் பங்கெடுத்தனர்  (https://www.themalaysianinsight.com/s/24371/).  அந்த ஆய்வின் அறிக்கையைக் கண்டு நாங்கள் அதிர்ச்சிக்குள்ளானோம். ஆய்வில் தெரியவந்த விபரங்கள் :-

  1. 15 விழுக்காடு மலேசியர்கள் அன்றாடம் 3 வேலை சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனராம். அதே சமயம்,  27 விழுக்காடு மக்களுக்கு அவசர தேவைக்குக் கையில் RM500 கூட இருப்பதில்லையாம்.
  2. பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தும் மலேசிய மக்கள் அன்றாட வாழ்க்கையில் அழுத்தத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
  3. 10-ல் 2 மலேசியர்கள் தங்களின் தேவைகளை, உணவு தேவையையும் சேர்த்து குறைத்து வருகின்றனராம்.
  4. 64 விழுக்காடு மக்கள், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக சொல்கின்றனர்.
  5. 40 விழுக்காடு மக்கள் வீட்டு மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
  6. 20 விழுக்காடு மக்கள் தனியார் கடனிலும், கடன் அட்டை தொல்லையிலும் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.
  7. 15 விழுக்காடு குடும்பங்களில் பொருளாதார பிரச்சனையினால் மோதல்கள் ஏற்பட்ட வண்ணமாக இருக்கிறது.
  8. 11 விழுக்காடு மக்கள் தங்களிடம் இருக்கும் சொத்துகளை விற்று, அன்றாட செலவினங்களைக் கவனித்து வருகின்றனர்.

6. தொழிலாளர்களுக்குச் சேமிப்பு ஒரு கனவாகிறது

வயது முதிர்ந்த காலத்தில் சேமிப்பில்லாமல் பெரும்பகுதி மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், சம்பளப் பற்றாக்குறைதான். இந்தச் செய்தியின்படி: “சேமநிதியின் அறிக்கைப்படி 22 விழுக்காடு தொழிலாளர்களுக்கு மட்டுமே ஓய்வூதிய காலத்தில், போதுமான சேமிப்பு இருப்பதாக கூறப்படுகிறது” (sumber: https://www.bharian.com.my/node/153774/amp). இது என்ன அறிகுறியை நமக்கு காட்டுகிறது? நாட்டிலுள்ள பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எதிர்கால உத்தரவாதம் இல்லை என்பது தெரிகிறது. இன்று மலேசியாவில், 60 விழுக்காடு தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் கிடையாது; சேமிப்பும் கிடையாது. ஆக, வறுமையில் இவர்கள் வாழ்க்கை முடிவடைவதுதான் நிலைமை. இந்த நிலை மாற வேண்டுமாயின், தொழிலாளர்கள் சுயமரியாதையுடன், நாகரீக வாழ்க்கை வாழ்வதற்காக வருமானம் கொடுக்கப்பட வேண்டும். இந்தப் பொறுப்பை இலாபத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முதலாளிகள் கையில் விட முடியாது. மக்களின் நலன் காக்கும் அரசாங்கத்தின் பொறுப்பு இது.

மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்புடைய குறந்தபட்ச சம்பளத் தொகையை நிர்ணயிக்க வேண்டும்; பி.எஸ்.எம்.-மின் கோரிக்கை RM1500. இது ஒரு பெரிய தொகை அல்ல.

கடந்த 2018 ஜனவரி 15-ல், தேசிய சம்பளத் தொழில்நுட்பக் குழுவுடன் பி.எஸ்.எம். ஒரு சந்திப்பை நடத்தியது. அந்தச் சந்திப்பில் நாம் பகிர்ந்துக் கொண்ட முக்கிய விபரம், தற்போது அரசாங்கம் பயன்படுத்தும் குறைந்தபட்ச சம்பள தொகையை கணக்கிடும் முறையில் ஒரு பிரச்னை உள்ளது. அரசாங்கம் பயன்படுத்தும் வறுமை விகிதம் மலேசியாவின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை.

பொருத்தமற்ற / ஒப்புமையற்ற வறுமை விகிதம்

குறைந்தபட்ச சம்பளத் தொழில்நுட்பக் குழு எங்களுக்கு விளக்கியதன்படி, குறைந்தபட்ச சம்பளத்தைக் கணக்கிடும் முறை பின்வருமாறு:

இந்த கணக்கீட்டு முறைப்படி பார்த்தால், அரசாங்கம் முன்வைக்கும் வறுமை விகிதம் (வறுமைக்கோட்டு ஊதியம்) இன்றையச் சூழலில், 2018-ல் மிக மிகக் குறைவாக இருப்பதோடு, மக்களின் உண்மையான வறுமை நிலையையும் காட்டவில்லை.

இப்படியான வறுமைக்கோட்டு ஊதியத்தை கணக்கில் கொண்டு அரசாங்கம் நிர்ணயிக்கும் வறுமை விகிதத்தின் அடிப்படையில் அரசாங்கமே சம்பள அளவை முன்மொழியக்கூடும் :-

மறுநிலையில், குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்க நாங்கள் முன்மொழியும் கணக்கீட்டு முறை, ஒப்புமையுள்ள வறுமை விகிதம் என்பது குடும்பத்தின் சராசரி வருமானத்திலிருந்து 60 விழுக்காடு ஆகும்.

ஒரு குடும்பத்தின் மாதாந்திர சராசரி  சம்பளம் பற்றி தெரிந்துகொள்ள கீழுள்ள வரைபடத்தைக் காணவும் :-

மேற்கண்ட அறிக்கையின்படி, ஒரு குடும்பத்தின் மாதாந்திர சராசரி  சம்பளம் RM5,228; அதில் 60 விழுக்காடு என்பது RM3,136.

ஒரு குடும்பத்தின் மாதாந்திர சராசரி  சம்பளத்தை அடிப்படையாக வைத்து குறைந்தபட்ச சம்பளத்தைக் கீழ்கண்டவாறு கணக்கிட முடியும் :-

ஒப்புமைமிக்க இந்தக் கணக்கீடு குறைந்தபட்ச சம்பளத் தொகை RM2071 (தீபகற்ப மலேசியா),  RM1720 (சபா)  RM1767 (சரவாக்) என நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

ஆனால், பி.எஸ்.எம் கோருவது RM1500 மட்டுமே. இப்போதிருக்கும் RM 1000-லிருந்து மிகப்பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டே, பி.எஸ்.எம். RM1500-ஐ குறைந்தபட்ச சம்பளமாகக் கோருகிறது.

இறுதியாக, கடந்த 18 ஜூலை 2018-ல், மனிதவள அமைச்சுடன் நடந்த கலந்துரையாடலிலும், RM1,500-யைக் குறைந்தபட்ச சம்பளமாக அறிவிக்க வேண்டும் என்பதை பி.எஸ்.எம். முன்வைத்தது.

அதற்கான எல்லா நியாயங்களையும் முன்வைத்தாகி விட்டது. முதலாளிகளின் இலாபம் குறையும் என்ற ஒற்றைச்சாக்கில், தொழிலாளர்களின் அனைத்து நியாயங்களையும் கொலை செய்யக்கூடாது என மக்கள் தேர்ந்தெடுத்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திடம் பி.எஸ்.எம். கேட்டுக்கொள்கிறது.

ஆட்சியைப் பிடிக்கும் முன், தொழிலாளர்களுக்கு ஆசை வார்த்தைக் காட்டிவிட்டு, ஆட்சியில் அமர்ந்தவுடன் முதலாளிகளுக்குத் தாளம் போடுவதை விட்டுவிட்டு, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.

சிவரஞ்சனி மாணிக்கம்

தொழிலாளர் பிரிவு, பி.எஸ்.எம்.