கலைஞர் கடைசியாக வென்ற இடம் மெரினா! – ‘ஞாயிறு’ நக்கீரன்

கைம்மாறு கருதாமல் கொடையளிக்கும் ஈகைக் குணத்தை காலமெல்லாம் கைக்கொண்டிந்த சீதக்காதி வள்ளல் இறந்த பின்னும் அவரின் கொடைத் தன்மை வெளிப்பட்டதைப் போல, அரசியல் பயணத்திலும் பொது வாழ்விலும் காலமெல்லாம் போராட்டம் நடத்திய கலைஞர் மு.கருணாநிதி, 95-ஆவது அகவையில் இறந்த பின்னும் தனக்கான இடத்திற்காக போராட வேண்டியிருந்தது.

சிற்பியர் தட்டிதட்டி செதுக்கிய சிற்பத்தைப் போன்று, சட்ட மேதையர் பார்த்து பார்த்து உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தை முதன்முதலில் திருத்த வைத்தவர் தந்தை பெரியார். அதுவும், கல்வி வாய்ப்பிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெறுவதற்காக.!

அந்தச் சட்டத்தை பற்றுக் கோடாகக் கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பின் தங்கிய மக்கள், சீர் மரபினர், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள், அருந்ததியினர் என்றெல்லாம் 69 விழுக்காடுவரை தமிழ் நாட்டில் கல்வி-வேலை வாய்ப்பிற்கு சட்டப்படியான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார் கருணாநிதி.

அதைவிட, உடல் ஊனமுற்றவர்களை அவர்களின் மனம் வருந்தும்படி உடல் ஊனமுற்றவர்கள் என்று அழைக்காமல் பேறு குறைந்தவர்கள் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் அன்றி, அவர்களுக்கும் கல்விப்-வேலை வாய்ப்பில் சட்டப்படியான முன்னுரிமையை ஏற்படுத்தினார் கலைஞர்;

இன்னும் ஒரு படி மேலாக, குடும்பத்திலும் சமூகத்திலும் புறக்கணிக்கப்பட்டு வாழ்வில் அல்லல்படும் திருநங்கை, திருநம்பியரை மூன்றாம் பாலினத்தவராக அறிவித்து அவர்களுக்கும் கல்வி-வேலை வாய்ப்புக்கான இடத்தை உறுதிப்படுத்திய கலைஞர், கடைசியில் அவர் இயற்கை எய்திய பின், தான் விரும்பியடி, தன் அரசியல் வழிகாட்டி அறிஞர் அண்ணா துயில் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் தானும் மீளாத் துயில் கொள்ள முனைந்தது முடியாமல் போகுமோ என்று அஞ்சும் அளவிற்கு அவருக்கு தடை ஏற்பட்டது!.

அரசியல் தலைவர், இலக்கிய வாணர் என்று அறியப்பட்டாலும், கலைஞரை ஒரு சமூகப் போராளி என்பதுதான் பொருத்தமாக இருக்கும். சமூக நீதிக்காகவும், சமதரும சமுதாயத்திற்காகவும் காலமெல்லாம் பாடாற்றிய கலைஞர் மு.கருணாநிதி, நலிந்த மக்களின் மீட்சிக்காக கடைசிவரைப் போராடினார். இப்படி யெல்லாம், மற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்த கலைஞர், கடைசியில் தனக்கான இட ஒதுக்கீட்டிற்காக சட்டப் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.

இந்திய அரசியலில் ஆரிய ஆதிக்கம் பல வகையாலும் கொடிகட்டிப் பறக்கும் சூழலில், தமிழகத்தின் இன்றைய தலைமைச் செயலரும் சோ.இராமசாமி வழியில் கடுகளவும் பிறழாது திராவிட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழிய எதிர்ப்பு நஞ்சை வஞ்சகமில்லாமல் கக்கிக் கொண்டிருக்கும் ‘ஆடிட்டர்’ குருமூர்த்தியும் சென்னை ஆரிய ஆதிக்கத்தின் இன்றைய ஒருசில சாட்சிகள்.

பொதுவாக, தங்களின் நலத்திற்காக நீதியையும் நியாயத்தையும் முடித்த மட்டும் வளைக்கும் ஆரியம், அதை சமயத்தின் பெயரால் சாதித்திக் கொள்வதில்தான் அதன் தந்திரமும் குயுக்தியும் அடங்கியுள்ளன. கலைஞர் விடயத்தில் முதலில் சட்ட சிக்கல் என்று சொல்லி மெரினா கடற்கரையில் இடமளிக்க மறுதலித்து அடம் பிடித்தவர்கள், அந்தச் சட்ட சிக்கல் நீக்கப்பட்டதும் வேறு எதை-யெதையோ சொல்லி சமாளிக்க முற்பட்டு, அதுவும் முடியாமல் போகவே கடைசியில் அடம் பிடித்தனர்.

முரண்பாடாக வழக்காடுகிறீர்கள் என்று நீதியரசர் எச்சரித்தும் உறைக்காமல், மொக்கையாக வழக்காடி.. வாதாடி.. வாயாடி.. கடைசியில் மூக்குடைபட்டனர். இறந்தும் தனக்கான இடத்திற்காகப் போராடி கடைசியில் வென்றபின், தன் நிறைவுப் பயணத்தை மேற்கொண்டார் கலைஞர்.

49 ஆண்டுகளுக்கு முன் அறிஞர் அண்ணா காலமானபோது, அவருக்காக கலைஞர் தீட்டிய இறங்கற் கவிதையில்,

.”. .. .. அண்ணா நீ இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில், இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை, உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா!”

என்று முடித்திருப்பார். அதன்படி அண்ணாவிடம் இருந்து பெற்ற இதயத்தை, இத்துணைக் காலமும் தன் இதயத்துடன் சேர்த்து சுமந்த கலைஞர், இரு இதயங்களுடன் தற்பொழுது வங்கக் கடலில் மீளா உறக்கம் மேற்கொண்டுள்ளார்.

24 லீப் ஆண்டுகளைத் தொட்ட கலைஞர், இந்த மண்ணில் 34,399 நாட்களில் மணம் பரப்பிய நறுமலராக வாழ்ந்துள்ளார். அதில், கோட்டை(சென்னை தலைமைச் செயலக)க் கொத்தளத்தில் 6863 நாட்கள் வீற்றிருந்துள்ளார். இந்த சாதனையை எந்தத் தலைரும் எட்டியதில்லை.

இந்திரா காந்தி, ஜகஜீவன் ராம், இந்தர் குமார் குஜ்ரால் விஸ்வனாத் பிரதாப் சிங், தேவ கவுடா, ஏ.பி.வாஜ்பாயி, மன் மோகன் சிங் ஆகிய பிரதமர்களின் உருவாக்கத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் கலைஞர். இந்த பிரதமர்களில், இந்திரா காந்தியை உருவாக்கியவர் கர்மவீரர் காமராசர்; பின்னர் இந்திரா நெருக்கடியை சந்தித்தபொழுது அவரைக் காப்பாற்றியவர் கலைஞர்.

மொத்தத்தில் பதின்மூன்று தேர்தலில்களின் வென்ற கலைஞர், நிறைவாக தனக்கான இடத்திற்காகவும் சட்டப் போராட்டம் நடத்தி, அதிலும் வென்றார்.

அவர்மீதான மாறுபட்ட கருத்துகளும் விமர்சனங்களும் ஏராளம் உண்டு. குறையில்லாத மனிதர் என இந்த உலகில் எவரும் இலர்; ஆனாலும், கலைஞர், தன்னுடைய அரசியல் பயணத்தில் எவரையும் ஏமாற்றியதாக வரலாறு இல்லை;

ஆனால், மற்றவர்களை நம்பி கலைஞர் ஏமாந்தது அதிகம். குறிப்பாக, காவிரி விடயத்திலும் கச்சத் தீவுப் பிரச்சினையிலும் கலைஞருக்கு பச்சைத் துரோகம் புரிந்தவர் இந்திரா.

வாழ்ந்த காலத்தில்தான் கலைஞர் போராடினார் என்றால், அவரின் போராட்ட வாழ்க்கையின் வீச்சு.. .., தாக்கம், அவர் மறைவுக்குப் பின்னும் தொடர்ந்தது. அப்படி கடைசியாக கலைஞர் வென்ற இடம் மெரினா. எதிர்காலத்தில் மெரினா பெயரில் ஒரு சட்டமன்றத் தொகுதியை திமுக உருவாக்கினாலும் வியப்படைய ஏதுமில்லை.

மொத்தத்தில் தமிழன்னையின் தலைமகன் அண்ணாவும் அவரின் அன்பு இளவல் கலைஞரும் தமிழினத்தின் தலைநிலமாம் தமிழகம்;  அத்தமிழகத்தின் தலைநகராம் சென்னையின் மெரினா கடலோரத்தில் குமரிக் கடலின் இதமான தாலாட்டிலும் தண்தென்றலிலும் அருகருகே நீள்துயில் கொள்கின்றனர். ஓங்குக இருவரின் புகழ்!!