மசீசவுக்கு வாக்களிப்பீர்: பாஸ் அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்து

பாஸ் கட்சி அதன் உறுப்பினர்கள் அடுத்த மாதம் பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மசீசவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறது.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் “எதிர்க்கட்சி உணர்வுடன்” அவ்வேண்டுகோளை விடுப்பதாகக் கூறினார்.

இடைத் தேர்தலில் பாஸ் அதன் கட்சியினரை மசீசவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளுமா என்று வினவியதற்கு, “இன்ஷா அல்லாஹ், எதிர்க்கட்சி உணர்வில் ஒன்றுபட்டிருக்கிறோம்” என்றாரவர்.

நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவில், ஸ்ரீசித்தியா இடைத் தேர்தலுக்கான பாஸ் வேட்பாளரை அறிவித்த பின்னர் ஹாடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இரண்டு நாள்களுக்குமுன் மசீச, அதன் செராஸ் பத்து 11 கிளை இளைஞர் தலைவர் டான் சீ தியோங்கை பலாக்கோங் இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவித்தது.

பலாக்கோங், ஸ்ரீசித்தியா இரண்டிலும் ஒரே நாளில், செப்டம்பர் 8-இல் இடைத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

மாராங் எம்பி-ஆன ஹாடி, ஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் அம்னோ கட்சியினர் பாஸுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறார்.

“அம்னோவுக்கென தனிச் செல்வாக்கு உண்டு. அது எங்களுக்கு நன்மையாக அமையும்”, என்றார்.

ஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பரப்புரை செய்வதற்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உள்பட யார் வேண்டுமானாலும் வரலாம், பாஸுக்கு உதவலாம் என்று ஹாடி கூறினார்.

“யாருக்கு எதிராகவும் எங்கள் கதவு மூடப்படாது”, என்றாரவர்.