முன்பணம் செலுத்தாமல் ஜொகூரில் வீடு வாங்கலாம், மாநில அரசு அறிவிப்பு

ஜொகூர் மாநில அரசு, அம்மாநில மக்கள் முன்பணம் செலுத்தாமல் சொந்த வீடு பெறும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மாநிலச் சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் ஹஸ்னி முஹமட்டின் கேள்விக்குப் பதிலளிக்கையில், ஜொகூர் மாநில வீடமைப்பு மற்றும் கிராம அபிவிருத்தி ஆட்சிக்குழு உறுப்பினர் சுல்கிப்ளி அஹ்மட் இதனைத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் வழி, தகுதிவாய்ந்தவர்கள் ஒரு வீட்டிற்கு, இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை வாடகை செலுத்த வேண்டும். அந்த வாடகையே முன்பணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு; வீடு அவர்களிடமே விற்கப்படும் எனக் கோத்த இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினருமான அவர் விளக்கமளித்தார்.

“வீடு வாங்குபவர் ஓர் ஒப்பந்தத்தின் வழி, வாடகை செலுத்துவார், ஒப்பந்தம் முடிந்தபின், மேம்பாட்டாளரிடம் தொடர்ந்து பணம் செலுத்தி, வீட்டின் உரிமையாளர் ஆவார்,” என சுல்கிப்ளி கூறினார்.

“ஒருசிலர், வீட்டுக்கான முன்பணம் செலுத்தவோ அல்லது வங்கிக் கடன் பெறவோ முடியாமல் தவிக்கின்றனர் என்பதை மாநில அரசு நன்கு உணர்ந்துள்ளது. எனவே, இவர்களுக்கு உதவவே மாநில அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது,” என்றார் அவர்.

‘ஜாவ்ஹார் பிரிஹாத்தின்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் வழி பெறப்படும் வீடுகளை, மூன்றாம் தரப்பினருக்கு வாடகைக்கு விடக் கூடாது என்பதனையும் சுல்கிப்ளி வலியுறுத்தினார்.

“இந்த வீடுகளை வாடகைக்கு விடக்கூடாது. மூன்றாம் தரப்பினருக்கு வாடகைக்குக் கொடுக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களுடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்,” என்றும் அவர் சொன்னார்.