மசீச: பலாக்கொங் இடைத் தேர்தலால் பிஎன்னில் விரிசல் இல்லை

பாரிசான் நேசனல் உறுப்புக் கட்சிகளுக்கிடையில் விரிசல் ஏற்பட்டிருப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கும் மசீச இளைஞர் பகுதி, பலாக்கொங் இடைத் தேர்தலில் பிஎன் கட்சிகள் அனைத்தும் மசீசவுக்கு உதவும் என்று கூறியது.

இடைத் தேர்தலுக்கான 21-நாள் பரப்புரைக் காலத்தில் ஒவ்வொன்றின் பொறுப்புகள் குறித்தும் பிஎன் கட்சிகளுடன் விரிவாகக் கலந்து பேசப்பட்டிருப்பதாக மசீச இளைஞர் தலைவர் சோங் சின் வூன் கூறினார்.

“நேற்று வேட்பாளர் நியமனத்தின்போது அம்னோ, கெராக்கான், மஇகா பேராளர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்தனர்”, என்றவர் பெர்னாமாவிடம் கூறினார்.

மசீச அதன் கட்சிச் சின்னத்தில் போட்டியிடுவது பிஎன் கூட்டமொன்றில் அனைத்து உறுப்புக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விசயம்தான் என்றாரவர்.

“ உறுப்புக் கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகளைப் பெற முடியுமா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அதற்கு இதை (இடைத் தேர்தலை) ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உறுப்புக்கட்சிகளின் எதிர்காலப் பாதையைத் திட்டமிடவும் இது அவசியம்”, என்றாரவர்.

பலாக்கொங் இடைத் தேர்தல் ஒரு வணிகரான மசீசவின் டான் சீ தியோங்குக்கும் பக்கத்தான் ஹரப்பானின் டிஏபி வேட்பாளரான வொங் சியு கியிவுக்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமைந்துள்ளது.