‘ஐயா, கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்க’: மசீசமீது போக்குவரத்து அமைச்சர் பாய்ச்சல்

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) போக்குவரத்து சம்மன்களை இரத்துச் செய்யும் முடிவைக் குறைகூறும் மசீசவினரைக் கடுமையாகச் சாடினார்.

மசீச அரசாங்கத்தில் இருந்தபோது ஏற்படுத்தி வைத்ததுதான் இந்த ஏஇஎஸ் பிரச்னை என்றாரவர்.

“யார் குறை சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன். ஆனால், மசீச தலைவர்கள் குறை சொல்லக் கூடாது. அவர்கள் கபடதாரிகள்.

“உங்கள் முன்னாள் மசீச போக்குவரத்து அமைச்சரின் கைங்கரியம்தானே இது…..இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் ஒரு முட்டாள்.

“அதனால் யோசித்துப் பேசுங்கள். நீங்கள் இன்று என்ன சொன்னாலும் அது அந்த மசீச அமைச்சர்களைத்தான் பாதிக்கும்”, என இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் லோக் கூறினார்.

மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்கும், இளைஞர் தலைமைச் செயலாளர் லியோங் கிம் சூனும் ஏஇஎஸ் சம்மன்களை இரத்துச் செய்த போக்குவரத்து அமைச்சின் செயலைக் குறை கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றியபோது லோக் அவ்வாறு கூறினார்.

2012-இல் மசீசவின் கொங் சொங் ஹா போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ஏஇஎஸ் அமலுக்கு வந்தது.

2014-இல் லியோ தியோங் லாய் போக்குவரத்து அமைச்சர் ஆனபோதுகூட அதில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை, வசூலிக்கப்படாமலிருந்த 80விழுக்காடு அபராதத் தொகையை வசூலிப்பதற்கு அவர் எந்த வகையிலும் முயற்சி மேற்கொள்ளவில்லை என்றும் லோக் கூறினார்.

“இருவருமே அதில் கவனம் செலுத்தவில்லை”, என்றாரவர்.

ஏனென்றால் அது ஒருதலைச்சார்பான ஒப்பந்தம் என்று குறிப்பிட்ட லோக், அபராதத் தொகையில் ரிம150 தள்ளுபடி செய்து வசூல் செய்யும்போது அரசாங்கத்துக்கு அதில் எதுவும் மிஞ்சாது என்றார்.

அதையும் அவர் விளக்கினார். ஏஇஎஸ் ஒப்பந்தப்படி வசூல் செய்யப்படும் அபராதத் தொகையில் தானியக்க அமலாக்க முறையைச் செயல்படுத்தி வந்த ஏடிஇஎஸ் நிறுவனத்துக்கும் பேட்டா தெகாப் நிறுவனத்துக்கும் வசூலிக்கப்படும் ரிம300 அபராதத் தொகையில் 50 விழுக்காடு கொடுக்கப்பட வேண்டும்.

“ஆக (ரிம150 தள்ளுபடி செய்து) ரிம150 வசூலித்தால் அதை அந்த நிறுவனங்களுக்குத்தான் கொடுக்க வேண்டியிருக்கும்”, என லோக் கூறினார்.

மேலும், ஒவ்வொரு சம்மனுக்கும் அரசாங்கம் இரண்டு நிறுவனங்களுக்கும் ரிம16 கொடுக்க வேண்டும் என்ற விதியும் உண்டு. அபராதத் தொகை வசூலாகிறதோ இல்லையோ இந்த ரிம16 கொடுக்கப்பட்டாக வேண்டும்.

இப்படி இந்த இரண்டு வகை பணக் கொடுப்பல் முறையால் அவ்விரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே ரிம129 மில்லியனை அள்ளிக் குவித்திருப்பதாக அமைச்சர் சொன்னார்.

இத்தொகை அவ்விரண்டு நிறுவனங்களும் 47 ஏஇஎஸ் கேமிராக்களைப் பொருத்துவதற்காக செலவிட்ட தொகையைவிட பன்மடங்கு அதிகமாகும். 47 கேமிராக்களுக்கும், ஒரு கேமிராவின் விலை ரிம 250,000 என்று வைத்துக்கொண்டால்கூட அவை அதிகபட்சம் ரிம 10 மில்லியனைச் செலவிட்டிருக்கும்.

“எனவே அந்நிறுவனங்கள் ஏற்கனவே பெரும் ஆதாயத்தைக் கண்டு விட்டன”, என்றாரவர்.