மலேசியாவின் அரசு வருமான இன்னல்களைப் போக்க ‘பரிவிரக்கமுள்ள’ சீனா உதவும், மகாதிர் நம்புகிறார்

 

மலேசியா எதிர்க்கொண்டுள்ள இக்கட்டான நிலை மீது சீனா பரிவிரக்கம் காட்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதிர் முகமட் நம்பிக்கை தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் பெரும் நன்மைகளைக் காண முடியும் என்று மகாதிர் இன்று பெய்ஜிங்கில் சீனப் பிரதமர் லி கெகியாங்குடன் நடைபெற்ற ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சீனாவை இன்று மலேசியா எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை புரிந்துகொள்ளச் செய்ய முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

நாங்கள் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் மீது சீனா பரிவிரக்கம் காட்டும் என்று நான் நம்புகிறேன். மேலும், எங்களுடைய உள்நாட்டு அரசு வருமான பிரச்சனைகளைத் தீர்க்கவும் சீனா உதவும் என்று மகாதிர் கூறினார்.

சீனாவுடனான கிழக்குக் கடற்கரை இரயில் தடம் மற்றும் சபாவில் வாயுக் குழாய்கள் திட்டங்கள் பற்றிய எதையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும், நாட்டின் கடன் பிரச்சனைகளைக் கடுமையாகக் கையாளும் நோக்கத்தில் இத்திட்டங்கள் பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும் என்பதில் மகாதிர் விடாப்பிடியாக இருந்து வந்துள்ளார்.

நேற்றிரவு ஒரு விருந்தில் கலந்து கொண்ட மகாதிர், இத்திட்டங்கள் இரத்து செய்யப்பட்டால் மலேசிய அரசாங்கம் ரிம100 பில்லியனை சேமிக்க முடியும் என்று கூறினார்.

நமது இரண்டு நாடுகளும் பெரும் பலன்களை அடைய முடியும். கோட்பாடுகள் வேறுபட்டிருந்தாலும் அனைத்து நாடுகளுடனும் நட்பைக் பேணும் கொள்கையை மலேசியா கொண்டிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

நாங்கள் நல்லுறைவை விரும்புகிறோம், ஏனென்றால் எங்களுடைய விளைபொருள்களுக்கு சந்தை தேவைப்படுகிறது. சீனா பொருள்களை, குறிப்பாக செம்பனை எண்ணெய்யை, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யும் என்று கூறப்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று மகாதிர் கூறினார்.