கேரளாவுக்கு ஏற்பட்டது அதிதீவிர இயற்கை பேரிடர்! அறிவித்தது மத்திய அரசு

மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலைகுலைந்து நிற்கும் கேரளாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும்பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. #keralafloodlosses #keralafloodlosses #keralanaturaldisaster

கேரளாவுக்கு ஏற்பட்ட பாதிப்பை அதிதீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது மத்திய அரசு
புதுடெல்லி:

கடந்த நூறாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி, டெல்லி அரசின் சார்பில் ரூ.10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் ரூ.25 கோடி, பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி, அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசின் சார்பாக சார்பில் ரூ.20 கோடி, குஜராத் அரசின் சார்பாக ரூ.10 கோடி, உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பாக ரூ.15 கோடி, பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.10 கோடி, ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி, மத்தியப்பிரதேசம் அரசின் சார்பில் ரூ.10 கோடி, மகாராஷ்டிரா அரசு சார்பில் 20 கோடி ரூபாய் என நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பல மாநிலங்களை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தனது ஒருமாத சம்பளத்தை அளிப்பதாக இன்று அறிவித்துள்ளார்.

கேரளாவில் ஏற்பட்ட பெருஞ்சேதங்களை இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தி இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று கேரளாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும்பாதிப்பை அதிதீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. #keralafloodlosses #keralafloodlosses #keralanaturaldisaster

-http://eelamnews.co.uk

TAGS: